மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு ஆயுள் தண்டனை

பள்ளி மாணவியை ஏமாற்றி திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.

Update: 2021-11-24 19:25 GMT
தாமரைக்குளம்
அரியலூரை அடுத்த ஒட்டக்கோவில் காலனித் தெருவைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 24). இவர் கடந்த 2018-ம் ஆண்டு, 16 வயது மாணவி ஒருவரிடம் ஆசை வார்த்தைகள் கூறி, திருச்சிக்கு அழைத்துச்சென்று திருமணம் செய்து, அங்கேயே தங்கி குடும்பம் நடத்தியுள்ளார். இதனால், அந்த மாணவி கர்ப்பமடைந்தார்.  இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், அதே ஆண்டில் தட்சிணாமூர்த்தியை அரியலூர் மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இதற்கு உடந்தையாக இருந்ததாக தட்சிணாமூர்த்தியின் சகோதரி செல்வி, அவரது கணவர் பெரியசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
ஆயுள் தண்டனை
இந்த வழக்கின் விசாரணை அரியலூர் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதன் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த், சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்து கர்ப்பமாக்கிய தட்சிணாமூர்த்திக்கு ஆயுள் தண்டனையும், ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், மாணவிக்கு ரூ.5 லட்சம் நிவாரண தொகை வழங்க அரசுக்கு உத்தரவிட்டார். குற்றம் நிரூபிக்கப்படாததால் செல்வி மற்றும் அவரது கணவர் பெரியசாமி விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்