பள்ளி வளாகத்தில் உடற்கல்வி ஆசிரியர் தற்கொலை

அருப்புக்கோட்டையில் பள்ளிக்கூட வளாகத்தில் உடற்கல்வி ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதற்கான காரணம் குறித்து அவர் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினார்கள்.

Update: 2021-11-24 20:37 GMT
அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டையில் பள்ளிக்கூட வளாகத்தில் உடற்கல்வி ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதற்கான காரணம் குறித்து அவர் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினார்கள்.
பள்ளி வளாகத்தில் தற்கொலை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பாண்டுரங்கன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 58). இவர், அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 32 வருடங்களாக உடற்கல்வி ஆசிரியராகவும், பின்னர் உடற்கல்வி இயக்குனராகவும் பணிபுரிந்து வந்தார். 
 இந்த நிலையில் நேற்று காலையில் பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
 இதைப்பார்த்து சக ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். 
ஆசிரியர் ராமகிருஷ்ணனின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடிதம் சிக்கியது 
 இதுகுறித்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் கடன் பிரச்சினை காரணமாக ஆசிரியர் ராமகிருஷ்ணன் தற்கொலை செய்தது தெரியவந்தது.
மேலும் அவர் எழுதியதாக ஒரு கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். மனக்குழப்பம் மற்றும் கடன் பிரச்சினை காரணமாக இந்த முடிவை எடுக்கிறேன் என அவர் அதில் எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். 
பள்ளி வளாகத்தில் ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணையை தொடர்ந்துள்ளனர்.

மேலும் செய்திகள்