கர்நாடகத்தில் 15 அரசு அதிகாரிகளின் வீடுகளில் சோதனை; பல கோடி ரூபாய் நகை-பணம், ஆவணங்கள் சிக்கியது

பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக வந்த புகாரை தொடர்ந்து 15 அரசு அதிகாரிகளின் வீடு, அலுவலகங்கள் என 68 இடங்களில் ஊழல் தடுப்பு படை போலீசார் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் பல கோடி ரூபாய் நகை, பணம், ஆவணங்கள் சிக்கி உள்ளது.

Update: 2021-11-24 21:22 GMT
பெங்களூரு:
  
அதிகாரிகள் மீது புகார்கள்

  பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருக்கும் அரசு அதிகாரிகளின் வீடு, அலுவலகங்களில் ஊழல் தடுப்பு படை போலீசார் சோதனை நடத்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பது வழக்கம். சமீபத்தில் பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தில் ஏராளமான ஊழல் முறைகேடுகள் நடந்திருப்பதாக வந்த புகாரை தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள அலுவலகத்தில் ஊழல் தடுப்பு படை போலீசார் சோதனை நடத்தி இருந்தனர்.

  இதில், அரசு அதிகாரிகள் ரூ.134 கோடிக்கு முறைகேடு செய்திருப்பதற்கான ஆவணங்கள் போலீசாருக்கு கிடைத்தது. இந்த நிலையில், பெங்களூரு மாநகராட்சி, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பிற துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் தங்களது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக ஊழல் தடுப்பு படை போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தது. இதையடுத்து, புகார்கள் வந்த அதிகாரிகளை போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

15 அதிகாரிகள் வீடுகளில்...

  இந்த நிலையில், பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் நேற்று காலையில் ஒரே நேரத்தில் 15 அரசு அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்கள், அவர்களது உறவினர்கள் வீடுகளில் ஊழல் தடுப்பு படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். மாநிலம் முழுவதும் ஊழல் தடுப்பு படையின் 8 போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், 300 போலீஸ்காரர்கள் என ஒரே நேரத்தில் 410 போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

  ஒட்டு மொத்தமாக 15 அதிகாரிகளுக்கு சொந்தமான 68 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு இருந்தது. இந்த சோதனையின் போது பெங்களூரு மாநகராட்சியில் சாலை மற்றும் அடிப்படை வசதிகள் துறையில் அதிகாரியாக பணியாற்றி வருபவர் மாயண்ணா என்பவரின் வீட்டில் இரு்நது பல லட்சம் ரூபாய், நகைகள் போலீசாருக்கு சிக்கியதாக தகவல்கள் வெளியானது. மேலும் மாயண்ணாவுக்கு பெங்களூருவில் 6 வீட்டுமனைகள், 4 வீடுகள் இருப்பதற்கான சொத்து ஆவணங்களும் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்திருப்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

7 கிலோ தங்கநகைகள் பறிமுதல்

  இதுபோல், கதக் மாவட்டத்தில் வேளாண் துறையில் இணை இயக்குனராக பணியாற்றி வரும் ருத்ரேசப்பாவுக்கு சொந்தமான வீட்டில் இருந்து மட்டும் 7 கிலோ தங்க நகைகள், ரூ.15 லட்சம் சிக்கியது. அவரிடம் 3 சொகுசு கார்கள், கதக், சிவமொக்கா, தாவணகெரேயில் சொந்தமான வீடுகள், விவசாய நிலங்கள் இருப்பதும் தெரியவந்தது. அதாவது 53 தங்க கட்டிகள், 14 தங்க நாணயங்கள், 25 தங்க சங்கிலிகள், தங்க மோதிரங்கள் உள்பட 7 கிலோ தங்க நகைகள் சிக்கி இருந்தது. அவற்றில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர நெக்லசும் அடங்கும். இதுபோல கலபுரகி மாவட்டம் ஜேவர்கியில் பொதுப்பணித்துறை ஜுனியர் என்ஜினீயராக இருந்து வரும் சாந்தனகவுடா வீட்டில் இருந்து ரூ.54 லட்சம் மதிப்பிலான பணம், நகைகள் ஊழல் தடுப்பு படை போலீசாருக்கு கிடைத்தது.

  ஒட்டு மொத்தமாக பெங்களூருவில் மட்டும் 6 அரசு அதிகாரிகள் வீடுகளிலும், பெங்களூரு புறநகர், பெலகாவி, கலபுரகி, மண்டியா, மங்களூரு, பல்லாரி என மாநிலம் முழுவதும் 68 இடங்களில் ஒட்டு மொத்தமாக 15 அரசு அதிகாரிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி ஊழல் தடுப்பு படை போலீசார் அதிர்ச்சி கொடுத்திருந்தனர்.
  இந்த சோதனையின் போது 15 அரசு அதிகாரிகளின் வீடுகளிலும் இருந்தும் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், பணம், சொகுசு கார்கள், முக்கிய வீட்டுமனைகள், விவசாய நிலங்களின் பத்திரங்கள், வீடுகளின் சொத்து பத்திரங்கள் கிடைத்திருப்பதாக ஊழல் தடுப்பு படை போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
   
பணம் எண்ணும் எந்திரங்கள்

பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் நேற்று 15 அரசு அதிகாரிகளின் வீடுகளில் ஊழல் தடுப்பு படை போலீசார் சோதனை நடத்தி இருந்தனர். சோதனையின் போது அனைத்து அரசு அதிகாரிகளின் வீடுகளில் இருந்தும் பல லட்சம் ரூபாய் சிக்கியது. அதிகாரிகள் வீடுகளில் ஏராளமான பணம் சிக்கும் என்பதை முன்கூட்டியே தெரிந்திருந்த போலீசார், பணம் எண்ணும் எந்திரங்களை எடுத்து சென்றிருந்தனர். அதன்படி, அதிகாரிகள் வீடுகளில் சிக்கிய பணத்தை, பணம் எண்ணும் எந்திரங்கள் மூலமாக கணக்கிட்டு போலீசார் தெரிவித்து கொண்டனர்.

மேலும் செய்திகள்