வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

விழுப்புரம், விக்கிரவாண்டி பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-11-25 16:09 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட மகாராஜபுரம், தேவநாதசாமி நகர், கணேஷ் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை மாவட்ட கலெக்டர் டி.மோகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் உடனடியாக மழைநீரை வெளியேற்ற வேண்டும், மழைநீர் வெளியேறும் வரை அப்பகுதிகளில் தற்காலிக சாலை அமைத்திட வேண்டும், மேலும் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

காணை ஒன்றியம்

இதனை தொடர்ந்து காணை ஊராட்சி ஒன்றியம் சூரப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட அரும்புலி பகுதியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு முறையாக வழங்கப்பட்டுள்ளதா என்பதை மாவட்ட கலெக்டர் டி.மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அப்பகுதிகளில் வீட்டுமனைப்பட்டா இல்லாமல் ஏழ்மை நிலையில் குடிசையில் வசித்து வருபவர்களுக்கு உடனடியாக வீட்டுமனைப்பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்க தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.
அதன் பின்னர் கக்கனூர் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களிடம் கலந்துரையாடி பணிகள் மற்றும் ஊதியம் முறையாக வழங்கப்படுகிறதா என கேட்டறிந்து கலந்துரையாடினார்.

மாணவர்களிடம் கலந்துரையாடல்

அதன் பிறகு அத்தியூர்திருக்கை ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அவர், அங்குள்ள மாணவ- மாணவிகளிடம் கலந்துரையாடினார். அப்போது அனைவரும் நன்கு கல்வி கற்று சமுதாயத்தில் சிறந்தவர்களாக திகழ வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். தொடர்ந்து, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தை மாவட்ட கலெக்டர் டி.மோகன் சாப்பிட்டு பரிசோதித்தார். பின்னர் விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம் வேம்பி ஊராட்சியில் 100 சதவீதம் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் நடைபெற்று வரும் முகாமை அவர் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் வெண்ணிலா, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, தாசில்தார் ஆனந்தகுமார் உள்பட பலர் உடனிருந்தனர்..

மேலும் செய்திகள்