போடிமெட்டு மலைப்பாதையில் போக்குவரத்து தொடக்கம்

போடிமெட்டு மலைப்பாதையில் போக்குவரத்து தொடங்கியது. ஆனால் இரவுநேரத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

Update: 2021-11-25 16:16 GMT
போடி:

போடி மலைப்பகுதியில், கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, போடிமெட்டு மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டன. ராட்சத மரங்கள் வேரோடு சாய்ந்து மலைப்பாதையில் விழுந்தன. மண்சரிவு எதிரொலியாக நேற்று முன்தினம் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்தநிலையில் மலைப்பாதையில் விழுந்த மரங்களை வெட்டியும், மண் மற்றும் பாறைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தும் பணியும் துரிதமாக நடந்தது. இதனையடுத்து நேற்று காலை 7 மணி முதல் வாகன போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. இதனால் ஏலக்காய் தோட்டத்துக்கு வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் வாகனங்களில் கேரளாவுக்கு சென்றனர்.

 ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் கேரளாவுக்கு சென்றன. இதனால் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு மலைப்பாதையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மலைப்பாதை சீரமைப்பு பணி இன்னும் முழுமையாக நடைபெறவில்லை. போடி மற்றும் போடிமெட்டு மலைப்பாதையில், நேற்று மாலை 4 மணி முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 

எனவே பல்வேறு இடங்களில் மண் சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று மாலை 5 மணி முதல் வாகன போக்குவரத்துக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை மழை பெய்வதை பொறுத்து வாகனங்கள் இயக்கப்படுமா? என்று தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்