பெண் ஐ.பி.எஸ். அதிகாரி 1-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும்

பாலியல் வழக்கில் எதிர்தரப்பின் குறுக்கு விசாரணைக்காக பெண் ஐ.பி.எஸ். அதிகாரி வருகிற 1-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று விழுப்புரம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-11-25 16:27 GMT
விழுப்புரம், 

பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை கடந்த 11-ந் தேதி முதல் தொடங்கியது.  இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகிய இருவரும் ஆஜராகவில்லை. அவர்கள் இருவரும் ஆஜராகாததற்கான காரணம் குறித்து மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை கோர்ட்டு ஏற்றுக்கொண்டது. அதனை தொடர்ந்து சாட்சிகள் விசாரணை நடந்தது. இவ்வழக்கில் சம்பவத்தன்று புகார்தாரரான பெண் ஐ.பி.எஸ். அதிகாரியின் வாகன டிரைவரும், தற்போது பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருபவருமான பாலமுருகன் 4-வது சாட்சியாகவும், பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு வழி பாதுகாவலராக சென்றவரும் தற்போது பெரம்பலூர் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவருமான சந்திரசேகரன் 5-வது சாட்சியாகவும் சேர்க்கப்பட்டிருந்தனர். இவர்கள் இருவரும் நேற்று விழுப்புரம் கோர்ட்டில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். அதனை நீதிபதி கோபிநாதன் பதிவு செய்துகொண்டார். மேலும் இவ்வழக்கில் வருகிற 1-ந் தேதியன்று (புதன்கிழமை) பெண் ஐ.பி.எஸ். அதிகாரி விழுப்புரம் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் அன்றைய தினம் அவரிடம் எதிர்தரப்பான சிறப்பு டி.ஜி.பி. தரப்பினர் குறுக்கு விசாரணை செய்யலாம் என்றும் நீதிபதி கோபிநாதன் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்