மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு பொதுமக்கள் மறியல்

எருமப்பட்டி அருகே குட்டையில் இருந்த மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-11-25 16:41 GMT
எருமப்பட்டி:
பொதுமக்கள் சாலை மறியல்
எருமப்பட்டி அருகே புதுக்கோட்டை ஊராட்சி காளிசெட்டிபட்டிபுதூரில் உள்ள காவக்காரன் குட்டையில் இருந்த மரங்களை சிலர் வெட்டியதாக கூறப்படுகிறது. மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று காலை ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டனர். திடீரென அவர்கள் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பொதுமக்களின் சாலை மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்த சேந்தமங்கலம் தாசில்தார் சுரேஷ், எருமப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணாளன், பிரபாகரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நடவடிக்கை
மேலும் அவர்கள், காவக்காரன் குட்டை சம்பந்தமாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. வழக்கு தொடர்பான தீர்ப்பு வரும் வரை குட்டையில் யாரும் அத்துமீறி நுழையக்கூடாது. அனுமதியின்றி குட்டையில் மரம் வெட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பேச்சுவார்த்தையின் போது புதுக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவி பேபி கற்பகம், அலங்காநத்தம் வருவாய் ஆய்வாளர் செல்வமணி ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்