பழைய துணி வியாபாரிக்கு ஆயுள் தண்டனை

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்த பழைய துணி வியாபாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து, தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2021-11-25 16:52 GMT
தேனி:

பழைய துணி வியாபாரி

தேனி மாவட்டம் போடி தென்றல் நகரை சேர்ந்தவர் வீரக்குமார் (வயது 38). இவர், பழைய துணிகள் வாங்கி விற்பனை செய்து வந்தார். அவருடைய மனைவி லட்சுமி (25). இவர், கடந்த 2014-ம் ஆண்டு போடியில் உள்ள ஒரு கணினி மையத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் வீரக்குமார் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்தார். இதனால் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மேலும் அவர், தனது மனைவியை வேலைக்கு செல்லக்கூடாது என்று கூறினார். ஆனால் லட்சுமி தொடர்ந்து வேலைக்கு சென்று வந்தார்.

வெட்டிக் கொலை

கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் 6-ந்தேதி லட்சுமி வழக்கம்போல் தனது வீட்டில் இருந்து கணினி மையத்திற்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்பகுதியில் உள்ள ஒரு தியேட்டருக்கு பின்புற சாலையில் அவர் நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு வந்த வீரக்குமார் அவரிடம் தகராறு செய்தார்.

அப்போது அவர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தனது மனைவியை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த லட்சுமி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து லட்சுமியின் தாய் பஞ்சவர்ணம், போடி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரக்குமாரை கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு, தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்தது. வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ராஜராஜேஸ்வரி ஆஜராகி வாதாடினார். வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி வெங்கடேசன் நேற்று தீர்ப்பு கூறினார்.

மனைவியை கொலை செய்த வீரக்குமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 1 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். 

இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட வீரக்குமாரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்