உளுந்தூர்பேட்டையில் மாற்றுத்திறனாளி பெண்ணிடம் நகை பறிப்பு

உளுந்தூர்பேட்டையில் முகவரி கேட்பதுபோல் நடித்து மாற்றுத்திறனாளி பெண்ணிடம் நகையை பறித்துச்சென்ற 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-11-25 17:18 GMT
உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள காட்டுநெமிலி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் செல்வி(வயது 42). மாற்றுத்திறனாளி. இவர் தனது தந்தையுடன், இருசக்கர வாகனத்தில் உளுந்தூர்பேட்டைக்கு வந்தார். 
அப்போது 25 வயது மதிக்கத்தக்க 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள், செல்வி வந்த இருசக்கர வாகனத்தை வழிமறித்தனர். உடனே அவரும், இருசக்கர வாகனத்தை நிறுத்தினார். 

நகை பறிப்பு 

அப்போது 2 வாலிபர்களும், முகவரி கேட்பதுபோல் செல்வியிடம் பேச்சுகொடுத்தனர். செல்வியும், அவர்களுக்கு உரிய பதிலை தெரிவித்துக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ஒரு வாலிபர், செல்வி கழுத்தில் கிடந்த 2½ பவுன் நகையை பறித்தார். 
பின்னர் இருவரும் மோட்டார் சைக்கிளில் மின்னல்வேகத்தில் அங்கிருந்து சென்று விட்டனர். இதை சற்றும் எதிர்பாராத செல்வி, திருடன்... திருடன்... என்று கூச்சலிட்டார். ஆனால் அந்த பகுதியில் உதவிக்கு யாரும் இல்லை. இது குறித்து அவர், உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து 2 வாலிபர்களையும் வலைவீசி தேடி வருகிறார். 

மேலும் செய்திகள்