கண்டாச்சிபுரம் பொதுமக்களின் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை

கண்டாச்சிபுரம் பொதுமக்களின் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவிட்டார்.

Update: 2021-11-25 17:30 GMT
திருக்கோவிலூர், 

விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, கண்டாச்சிபுரம் போலீஸ் நிலையத்திற்கு திடீரென வந்தார். அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகள், வழக்குப்பதிவு குறித்த ஆவணங்களை அவர் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- 
போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீசார், வார விடுமுறை எடுத்துக்கொள்ளலாம். பொதுமக்கள் கொடுக்கும் புகாரை பெற்றவுடன், உரிய விசாரணை நடத்தி, பாரபட்சமின்றி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். 

கண்காணிப்பு கேமரா பொருத்துங்கள் 

பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதால் குற்ற சம்பவங்கள் குறைவதை பார்க்க முடிகிறது. எனவே கூடுதல் இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் ரோந்துப்பணி மேற்கொள்வதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை குறைய வாய்ப்பு உள்ளது. 
இவ்வாறு அவர் கூறினார். 
ஆய்வின்போது அரகண்டநல்லூர் பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம், கண்டாச்சிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர். 
முன்னதாக கண்டாச்சிபுரம் போலீஸ் நிலையத்தை தூய்மையாக வைத்திருந்த போலீசாரை அவர் வெகுவாக பாராட்டினார். 
இதனை தொடர்ந்து கண்டாச்சிபுரம் காவல் சரகத்தில் 50-வது கண்காணிப்பு கேமராவை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா இயக்கி வைத்தார். 

மேலும் செய்திகள்