குழந்தை பிறந்த 5-வதுநாளில் கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை

கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை

Update: 2021-11-25 17:55 GMT
ஜோலார்பேட்டை

குழந்தை பெற்ற 5-வது நாளில் கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பெண் குழந்தை பிறந்தது

ஜோலார்பேட்டையை அடுத்த பெரியபொன்னேரி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அரவிந்தன், கூலித்தொழிலாளி. இவரின் மனைவி காவியா (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. கர்ப்பமாக இருந்த காவியாவை கடந்த 20-ந்தேதி பிரசவத்துக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு, அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அவரும், குழந்தையும் மருத்துவமனையில் இருந்து கடந்த 23-ந்தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 

கிணற்றில் குதித்து தற்கொலை

இளம்பெண் காவியா தனது குழந்தைக்கு பால் கொடுக்க முடியாமல் வலியால் அவதிப்பட்டுள்ளார். தனது குழந்தைக்கு பால் கொடுக்க முடியாத மனவேதனையில் இருந்து வந்தார். 

நேற்று அதிகாலை காவியா தனது கணவரிடம், குழந்தையை பார்த்துக் கொள்ளுங்கள, நான் கழிப்பிடம் சென்று வருகிறேன், எனக் கூறி விட்டு வெளியில் சென்றார். ஆனால் வெகுநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர், காவியாவை ேதடிப்பார்த்தனர். 

ஆனால் அவரை காணவில்லை. வீட்டுக்கு அருகில் உள்ள ஒருவரின் விவசாயக் கிணற்றில் காவியாவின் துண்டு கிடந்தது. குடும்பத்தினர் விவசாய கிணற்றில் இறங்கி காவியாவை தேடினர். அங்கு, காவியா பிணமாக கிடந்ததைப் பார்த்து கதறினர்.

வருவாய் கோட்டாட்சியர் விசாரணை

இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசுக்கு குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் விரைந்து வந்து காவியாவின் பிணத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

காவியாவின் தாயார் சவுந்தரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். காவியாவுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்த உள்ளார்.

குழந்தை பிறந்து 5 நாட்களேயான நிலையில் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஜோலார்பேட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்