தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2021-11-25 19:59 GMT
ஆற்றை தூர்வார வேண்டும்
சீதப்பால் சாலையோரத்தில் காணப்படுவது புதரல்ல. இது கடுக்கரையில் இருந்து கனகமூலம்குடியிருப்பு வரை செல்லும் அலத்துறையாறு ஆகும். இந்த ஆறு பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளதால் செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால், மழை நேரங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆற்றை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                                 -மயில்.கார்த்திகேயன், சீதப்பால்.
சாலையில் வடியாத மழைநீர்
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உடபட்ட 43-வது வார்டு ராணித்தோட்டம், தடி டிப்போ சாலையில் உள்ள நல்லமேய்ப்பன் தெருவில் உள்ளது. இந்த தெருவில் இருந்து நெசவாளர் தெருவுக்கு செல்லும் சாலையில் மழைநீர் தேங்கி 10 நாட்களாகியும் வடியாமல் உள்ளது. இதனால், துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாக தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் மழைநீரை வெளியேற்ற சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்ைக எடுக்க வேண்டும்.  
-எஸ்.பிரகாஷ், ராணித்தோட்டம். 
வாகன ஓட்டிகள் அவதி
நாகர்கோவில் இடலாக்குடியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ்நிறுத்தம் பகுதியில் இரவு நேரம் மாடுகள், நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. சில நேரங்களில் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகளை விரட்டுகின்றன. இதனால், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவற்றை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                          -வடக்கு தாமரைகுளம், சித்தார்த்தன்.
பஸ் வசதி தேவை
நாகர்கோவிலில் இருந்து ஆரல்வாய்மொழி, காவல்கிணறு ஆவரைகுளம், பழவூர், ஊரல்வாய்மொழி வழியாக ராதாபுரத்துக்கு தடம் எண் '515 கே' இயக்கப்பட்டு வந்தது, கடந்த சில ஆண்டுகளாக இந்த பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அந்த பகுதி பொதுமக்கள், பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, பொதுமக்கள் நலன்கருதி மீண்டும் பஸ்சை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 -வாய்மொழி பகவதி, ஊரல்வாய்மொழி.
சுவரை சீரமைக்க வேண்டும்
ஆரல்வாய்மொழி வடக்கூர் மெயின் ரோட்டில் அரசு நூலகம் உள்ளது. இந்த நூலகம் மூலம் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பயன்பெற்று வருகின்றனர். தற்போது நூலகத்தின் காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்துள்ளது. எனவே, வாசகர்கள் நலன்கருதி சுவரை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 -கலையன்பன், ஆரல்வாய்மொழி.
சேதமடைந்த பாலம்
செறுகோல் ஊராட்சிக்கு உட்பட்ட தெற்றையில் ரேஷன் கடை அருகில் பட்டணம் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயின் குறுக்கே புன்னைக்காடு ஊருக்கு செல்வதற்காக சிறிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த பாலம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனேயே செல்கின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும். 
                                   -ஜான்பாலஸ், புன்னைக்காடு.

மேலும் செய்திகள்