ஓமலூரில் கஞ்சா விற்ற பாலிடெக்னிக் மாணவர்கள் உள்பட 3 பேர் கைது கேரள மாணவர்களிடையே பரவி வரும் கஞ்சா கலாசாரம்

ஓமலூரில் கஞ்சா விற்ற பாலிடெக்னிக் மாணவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். சேலம் மாவட்டத்தில் படிக்கும் கேரள மாணவர்களிடம் பரவி வரும் கஞ்சா கலாசாரம் பொதுமக்கள் மற்றும் போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Update: 2021-11-25 20:26 GMT
ஓமலூர், 
கஞ்சா விற்பனை
சேலம் மாவட்டம், ஓமலூர் ரெயில் நிலையம் அருகே மேட்டூர் ரெயில் தண்டவாள பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ஓமலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்றுக்கொண்டிருந்த 5 பேர் கும்பலை போலீசார் சுற்றிவளைத்தனர். அவர்களில் 2 பேர் தப்பி ஓடிவிடவே, 3 பேர் போலீசாரிடம் பிடிபட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து 1½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பாலிடெக்னிக் மாணவர்கள் கைது
பிடிபட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கேரள மாநிலம் வயநாடு பகுதியை சேர்நத சைேலஜ் என்பவரின் மகன் விஷாக் (வயது 20), கேரள மாநிலம் ஆலப்புழா மாவேலிக்கரை பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவரின் மகன் அப்பு (21) என்பதும், இவர்கள் ஓமலூர் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது. பிடிபட்ட மற்றொரு வாலிபர் இவர்களின் நண்பர் ஆவார். அவர் ஓமலூர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் அன்பழகன் (24) என்பது தெரியவந்தது. அதே நேரத்தில் தப்பிஓடியவர்கள் ராஜமணிகண்டன், சூர்யா என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பாலிடெக்னிக் மாணவர்கள் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
திடுக்கிடும் தகவல்கள்
இதனிடையே பாலிடெக்னிக் மாணவர்களுக்கு கஞ்சா கிடைத்தது எப்படி என்பது குறித்து பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கேரள மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் படித்து வருகின்றனர். அவர்களில், சில கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களுக்குள் வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் குழுக்களாக தங்கள் கருத்துக்களை பரிமாறி கொண்டிருந்தனர். 
இந்த நிலையில் மாவட்டத்தில் 3 கல்லூரிகளில் படிக்கும் கேரள மாணவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது பொதுமக்கள் மற்றும் போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.

மேலும் செய்திகள்