சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம்

பழனி நகரில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2021-11-28 16:53 GMT
பழனி: 

சபரிமலை சீசன் தொடங்கி உள்ளதால் பழனி அடிவாரம், கிரிவீதி பகுதிகளில் காலை, மாலை நேரங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பழனி நகரின் முக்கிய சாலையில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலை தடுக்க போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனால் காலை, மாலை நேரங்களில் மாடு, குதிரைகள் சாலைகளில் சுற்றி திரிவதால் நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக திண்டுக்கல் சாலை, உடுமலை சாலையில் குதிரை, மாடுகள் சுற்றி திரிவதோடு, சாலையின் நடுவில் படுத்து கொள்கிறது. இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. 

சில நேரங்களில் கால்நடைகளின் மீது வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுவதும் தொடர்ந்து வருகிறது. எனவே இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் இதுபோன்று சாலையில் திரிந்த கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். எனவே பழனியிலும் இதுபோன்ற நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்