மண்டபம் பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை

மண்டபம் பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.

Update: 2021-11-29 17:15 GMT
பனைக்குளம், 
 ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகின்றது.  ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் 2-வது நாளாக நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று பகல் வரையிலும் தொடர் மழை பெய்தது. இந்த தொடர் மழையால் மண்டபம் மரைக்காயர் பட்டினம் பகுதியில் உள்ள வனச்சரக அலுவ லகம், கால்நடை மருத்துவமனை மற்றும் தனியார் பெட்ரோல் பல்க் உள்ளிட்ட பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வேதாளை, இடையர்வலசை பிரப்பன் வலசை உள்ளிட்ட பகுதிகளில்  ஏராளமான வீடுகளையும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதேபோல் ராமநாதபுரம் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வழுதூர் விலக்கு ரோட்டில் இருந்து ரெகுநாதபுரம், பெரியபட்டினம் செல்லும் சாலை மழை வெள்ளத்தால் மூழ்கியது. 
 பனைக்குளம், அழகன்குளம், ஆற்றங்கரை, சித்தார் கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.  மண்டபம் பகுதியில் நேற்று பகலில் பயங்கர சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.இந்த சூறாவளி காற்றில் காந்திநகர் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள ஏராளமான பனை மரங்கள் முறிந்து சாலையோரத்தில் விழுந்தன. சூறாவளி காற்றில் தோணித்துறை கடற்கரையில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் முன்பகுதியில் உள்ள மேற்கூரை சேத மானது. வீடுகளின் மேற்கூரை ஓடுகள் சேதமடைந்தன.

மேலும் செய்திகள்