14 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

கடலூரில் நேற்று ஒரே நாளில் 17 செ.மீ. கனமழை பெய்ததில், 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. 3 ஆயிரம் பேர் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

Update: 2021-11-29 19:59 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் கடந்த 3 நாட்களாக மாவட்டம் முழுவதும் அடைமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைவெள்ளம் சூழ்ந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் குமரிகடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல சுழற்சி காரணமாக கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி கடலூரில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை இடைவிடாமல் 4-வது நாளாக அடைமழை கொட்டித்தீர்த்தது. அதன்பிறகு மதியம் 1 மணி வரை மழை தூறிக்கொண்டே இருந்தது. பின்னர் மழை ஓய்ந்து லேசாக வெயில் தலைகாட்ட தொடங்கியது. கடலூரில் நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மட்டும் கடலூரில் 17.3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. 

வீடுகளை சூழ்ந்த வெள்ளம்

இதனால் கடலூரில் திரும்பிய பக்கமெல்லாம் சாலைகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதில் கடலூர்-நெல்லிக்குப்பம் சாலை, பாரதி சாலை, ஜட்ஜ் பங்களா ரோடு, வண்ணாரபாளையம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் முழங்கால் அளவுக்கு மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மழை நீரில் தத்தளித்தபடி சென்றனர்.
இதேபோல் இடைவிடாது கொட்டிய மழையால் நகரில் மஞ்சக்குப்பம் பத்மாவதி நகர், மணலி எஸ்டேட், ராகவேந்திரா நகர், மரியசூசைநகர், சூரியா நகர், வெளிசெம்மண்டலம், வேல்நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை மழைவெள்ளம் சூழ்ந்தது. ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் கடலூர் நகரமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. 
குடியிருப்பு பகுதிகளில் நிறுத்தி வைத்திருந்த கார், லாரி, இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை வெள்ளத்தில் மிதக்கின்றன. மேலும் நேற்று பகலில் கனமழை பெய்யாததால், வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை வெளியேற்றும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டனர். 
இதேபோல் கடலூர் முதுநகர் பகுதியிலும் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. மேலும் பல  வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இந்த தண்ணீரை வெளியேற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

போக்குவரத்துக்கு தடை

மேலும் கடலூர் கெடிலம் மற்றும் தென்பெண்ணை ஆறுகளில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் பெண்ணையாற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தால், கலெக்டர் அலுவலகம் எதிரே சாலையோரம் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் போலீசார் சாலையின் இருபுறமும் பேரி கார்டுகள் வைத்து அடைத்து, அவ்வழியாக வாகன போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளனர்.
கடலூர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளதால், அங்கு வரும் நோயாளிகள் முழங்கால் அளவுக்கு தேங்கி நிற்கும் தண்ணீரில் நடந்து தான் சிகிச்சை பெற வேண்டி உள்ளது. இதேபோல் மணம்தவிழ்ந்தபுத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மழைநீர் சூழ்ந்துள்ளதால் நோயாளிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
 இதற்கிடையே கடலூர் ராகவேந்திரா நகரில் உள்ள வீடுகளை மழைவெள்ளம் சூழ்ந்ததில், அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் சிரமப்பட்டனர். நெய்வேலி இந்திராநகர், வடக்குத்து பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. மேலும் கடைகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது.

3 ஆயிரம் பேர் தஞ்சம்

இதுபற்றி அறிந்த கடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையிலான வீரர்கள், வீடுகளில் சிக்கிய 20-க்கும் மேற்பட்டவர்களை படகு மூலம் மீட்டு, அருகில் உள்ள முகாம்களில் தங்க வைத்தனர். இதுவரை கடலூர் மாவட்டத்தில் 22 முகாம்களில் 3 ஆயிரம் பேர் தஞ்சமடைந்துள்ளனர். அங்கு அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் கனமழையால் கடலூர், பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள 7 கூரை வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. அந்த வீடுகளில் வசித்தவர்கள் ஏற்கனவே முகாம்களில் தங்க வைக்கப்பட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதேபோல் தொடர் கனமழையால் மாவட்டத்தில் இதுவரை 30 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல், உளுந்து, பருத்தி உள்ளிட்ட பயிர்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம், திட்டக்குடி, வேப்பூர், பரங்கிப்பேட்டை உள்பட மாவட்டம் முழுவதும் கனமழை வெளுத்து வாங்கியது. இடைவிடாது பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது.

மேலும் செய்திகள்