கொரோனா பாதிப்பு இல்லாதவர்கள் மட்டுமே பெங்களூருவுக்குள் நுழைய அனுமதி

பெங்களூரு விமான நிலையத்திற்கு வரும் பயணிகளில் கொரோனா பாதிப்பு இல்லாதவர்களை மட்டுமே நகருக்குள் அனுமதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

Update: 2021-11-29 22:06 GMT
பெங்களூரு: பெங்களூரு விமான நிலையத்திற்கு வரும் பயணிகளில் கொரோனா பாதிப்பு இல்லாதவர்களை மட்டுமே நகருக்குள் அனுமதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

மத்திய அரசுக்கு கடிதம்

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை துமகூரு சித்தகங்கா மடத்தில் சிவக்குமார சுவாமியின் 2-வது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் நடப்பு மாதத்தில் கனமழை பெய்து பெரிய அளவில் பயிர்கள் சேதமடைந்து உள்ளன. வீடுகள் உள்பட பல்வேறு வகையான கட்டிடங்கள், சாலைகள், பாலங்கள் சேதடைந்து இருக்கின்றன. நிதி தேவைப்பட்டால் உடனே மத்திய அரசை அணுகுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார். இதையடுத்து மழை வெள்ள சேதங்களை மதிப்பிட ஒரு குழுவை உடனே அனுப்புமாறு கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

மரபணு பரிசோதனை

மாநில அரசு தனது அதிகாரிகள் மூலம் சேதங்களை மதிப்பிட்டு வருகிறது. கலெக்டர்களின் வங்கி கணக்கில் ரூ.685 கோடி நிதி கையிருப்பு உள்ளது. இதை பயிர் சேதங்களுக்கு நிவாரணம் வழங்க பயன்படுத்தும்படி உத்தரவிட்டுள்ளேன். பயிர் சேதங்கள் குறித்து செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.

தார்வார், பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட சில பகுதிகளில் கொரோனா பரவல் ‘‘கிளஸ்டர்’’ ஆக மாறியுள்ளது. அந்த பகுதிகளில் வைரசால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி உள்ளோம். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளோம். சில மாதிரிகளை மரபணு பரிசோதனை கூடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

தீவிரமாக கண்காணிப்பு

பெங்களூரு விமான நிலையத்திற்கு வரும் அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். கொரோனா பாதிப்பு இல்லாதவர்களை மட்டுமே பெங்களூருவுக்குள் நுழைய அனுமதிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். கேரளாவில் இருந்து வருபவர்களை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

புதிய வகை கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதலை தீவிரமாக பின்பற்றுகிறோம். பள்ளி-கல்லூரிகளையும் கண்காணித்து வருகிறோம். மாணவர்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

மேலும் செய்திகள்