ஏர்கலப்பையுடன் விவசாயிகள் சாலை மறியல்

திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி ஏர்கலப்பையுடன் விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-12-01 05:11 GMT
திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி ஏர்கலப்பையுடன் விவசாயிகள்  சாலைமறியலில் ஈடுபட்டனர்.

20 கிராம விவசாயிகள்

திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியனில் நிலையூர் கண்மாய் அமைந்து உள்ளது. பொதுப்பணிதுறை சார்ந்த இந்த கண்மாய்க்கு வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்பட்சத்தில் நிலையூர் கால்வாய் வழியாக தண்ணீர் வந்து நிரம்பும். 
கூத்தியார்குண்டு, கருவேலம்பட்டி, சூரக்குளம், ஆலங்குளம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமத்திற்கு நிலையூர் கண்மாயில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் செல்லும்.ஆகவே பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் விவசாயம் செய்வார்கள். இந்த நிலையில் தற்போது தொடர்ந்து கனமழை பெய்துவரும் பட்சத்தில் கண்மாய் முழுமையாக நிரம்பவில்லை. சுமார் 60 சதவீதம் தண்ணீர் உள்ளது.

சாலை மறியல்

ஆகவே நிலையூர் கண்மாய் இருந்து அதனை சார்ந்துள்ள 20-க்கும் மேற்பட்ட கண்மாய்க்கு தண்ணீர் செல்லாத நிலை உள்ளது. ஆகவே நிலையூர் கண்மாய்க்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும். மேலும் நீர்பிடிப்பு சார்ந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை நீதிமன்ற உத்தரவின்படி அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 
இந்த நிைலயில் நேற்று கூத்தியார் குண்டு, கருவேலம்பட்டி ஆகிய 20 கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டு கூத்தியார்குண்டு மெயின்ரோட்டிற்கு வந்தனர்.பின்னர் அவர்கள் ஏர்கலப்பை மற்றும் வாழை கன்றுகளுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சில விவசாயிகள் ரோட்டில் அங்கப்பிரதட்சணம் செய்து தங்கள் எதிர்ப்பை காண்பித்தனர்.
இது குறித்து தகவலறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார், திருப்பரங்குன்றம் தாலுகா தாசில்தார் சரவணன் ஆகியோர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து மறியலை கைவிட்டனர்.

மேலும் செய்திகள்