‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2021-12-01 19:05 GMT
சேறும் சகதியுமான சாலை 
திருச்சி மாவட்டம் உறையூர் ராமலிங்க நகர் 2-வது மெயின் ரோட்டில் தற்போது பெய்த தொடர் மழையின் காரணமாக இந்த சாலை சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. மேலும், இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
பொய்யாமொழி, ராமலிங்க நகர், திருச்சி.
திருச்சி கொட்டப்பட்டு இந்திராநகர், வெங்கடேஸ்வரா நகர், வெங்கடேஸ்வரா நகர் விரிவாக்கம், ஐஸ்வர்யா எஸ்டேட் பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அப்பகுதியில் சாலையின் நடுவில் குழிகள் தோண்டப்பட்டு, குழாய்கள் பதித்து மூடப்பட்டன. அப்போது அவை சரியாக மண் கொட்டி மூடப்படாததால், தற்போது, மழை பெய்து சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. அத்துடன் குழி தோண்டிய இடம் பள்ளமாக இருப்பதாலும், அதில் மழைநீர் தேங்கி இருப்பதாலும் அந்த சாலையில் வாகனங்களில் செல்ல முடியவில்லை. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் தினமும் அவதி அடைந்து வருகிறார்கள். குறிப்பாக பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச்செல்லவும், அவசர தேவைக்கும் ஆட்டோக்கள், வேன்கள் அப்பகுதிக்கு வருவதில்லை. குறிப்பாக ஆம்புலன்ஸ் வாகனம் இந்த பகுதிக்கு வரமுடிவதில்லை. எனவே பாதாள சாக்கடைக்காக குழி தோண்டிய இடங்களில் கான்கிரீட் கலவை கொட்டி சாலையை செப்பனிட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜலட்சுமி, கொட்டப்பட்டு, திருச்சி.
அரசு பஸ் மீண்டும் இயக்கப்படுமா?
திருச்சி மாவட்டம் மணப்பாறை மருங்காபுரி தாலுகா பளுவஞ்சி பஞ்சாயத்திற்குட்பட்ட பொன்னகோன்பட்டியில் காலை, மாலை நேரங்களில் இயக்கப்பட்ட அரசு பஸ் தடம் எண் 45 கடந்த ஒருமாதமாக இயக்கவில்லை. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவின் ராஜ், பொன்னகோன்பட்டி, திருச்சி.
ஆபத்தான கிணறு 
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே கீழக்குறிச்சி ஊராட்சி அடைக்கல அன்னை நகர் 2-வது குறுக்கு தெருவில் பயன்பாட்டில் இல்லாத கிணற்றில் மழை நீர் நிரம்பி பாசி படர்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த கிணற்றில் ஆடு, மாடுகள் தவறி விழுந்து அடிக்கடி இறக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. மேலும் வாகனங்களில் செல்வோர் தடுமாறி விழவும் வாய்ப்புள்ளது. எனவே ஆபத்தான இந்த கிணற்றை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரியா, திருவெறும்பூர், திருச்சி.
மயானத்திற்கு அடிப்படை வசதி செய்யப்படுமா?
திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா பேரூர் ஊராட்சிக்குட்பட்ட கிழக்கு ராக்கம்பட்டியில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் மயான பாதை மற்றும் எரிமேடை வசதி இல்லாமல் மண்தரையில் உடல் அடக்கம் செய்யப்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் மயானத்திற்கு செல்ல பாதை வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடல் ஆற்றுவாரியில் இறங்கி பல்வேறு சிரமங்களுக்கு இடையே தூக்கி செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு மயானத்திற்கு செல்ல பாதை வசதி மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.
சூர்யா, முசிறி, திருச்சி.

மேலும் செய்திகள்