காவலாளி வீட்டில் திருடிய பெண் கைது

கன்னியாகுமரி அருகே காவலாளி வீட்டில் திருடிய பக்கத்து வீட்டு பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 18 பவுன் நகைகள் மீட்கப்பட்டது.

Update: 2021-12-03 17:41 GMT
கன்னியாகுமரி, 
கன்னியாகுமரி அருகே காவலாளி வீட்டில் திருடிய பக்கத்து வீட்டு பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 18 பவுன் நகைகள் மீட்கப்பட்டது.
காவலாளி வீடு
கன்னியாகுமரி அருகே லீபுரம் லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் செல்லப்பன் (வயது 58), காவலாளி. இவருடைய மனைவி புஷ்பா (54). இவர்களுடைய மகள் சங்கீதா (25).
திருமணமான சங்கீதா, நிறைமாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் தற்போது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து சங்கீதாவை அவரது தாயார் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அப்போது வீட்டை பூட்டாமல் சாத்தி விட்டு சென்றதாக தெரிகிறது.
18 பவுன் நகை கொள்ளை
பின்னர் அவர்கள் வீடு திரும்பிய போது பீரோவில் வைத்திருந்த 18 பவுன் நகைகள், ரூ.5 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது. இதனை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், பீரோவில் இருந்த துணிமணிகள் அப்படியே இருந்தது. கொள்ளை நடந்ததற்கான அடையாளம் தெரியவில்லை.
இதுகுறித்து செல்லப்பன் கன்னியாகுமரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா, இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அங்கு மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டன.
பக்கத்து வீட்டு பெண் கைது
மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து காவலாளி வீட்டில் திருடிய மர்மநபர் யார்? என விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் காவலாளி வீட்டில் திருடியதாக பக்கத்து வீட்டில் வசித்த சுவர்ணலதா (30) என்ற இளம்பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 
போலீசில் சுவர்ணலதா சிக்கியது எப்படி? என்பது குறித்து பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. 
பரபரப்பு தகவல்
அதாவது கைதான சுவர்ணலதா, புஷ்பா குடும்பத்தினரிடம் நெருக்கமாக பழகி வந்துள்ளார். அப்போது அவர்களிடம் ஏராளமான நகை, பணம் இருப்பதை அவர் அறிந்துள்ளார்.
இந்தநிலையில் புஷ்பா மகள் சங்கீதாவை அழைத்துக் கொண்டு வெளியே சென்றதை நோட்டமிட்ட அவர், அந்த வீட்டுக்குள் நுழைந்தார். மேலும் பீரோ சாவியை புஷ்பா எந்த இடத்தில் வைப்பார்? என்ற விவரமும் சுவர்ணலதாவுக்கு நன்றாக தெரியும்.
நகை மீட்பு 
அந்த சாவியை எடுத்து பீரோவை திறந்த அவர் 18 பவுன் நகை, ரூ.5 ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டு, சாவியை அதே இடத்தில் மீண்டும் வைத்து விட்டு ஒன்றுமே நடக்காதது போல் சென்று விட்டார். ஆனால் போலீசாரின் சந்தேக பார்வையில் சிக்கிய அவர் வசமாக மாட்டிக் கொண்டார். துருவி, துருவி அவரிடம் நடத்திய விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டார்.
அதே சமயத்தில் திருடப்பட்ட நகை, பணத்தை தன்னுடைய வீட்டில் பிரிட்ஜில் மறைத்து வைத்திருப்பதாக கூறியுள்ளார். பின்னர் 18 பவுன் நகை, ரூ.5 ஆயிரத்தை போலீசார் மீட்டனர். காவலாளி வீட்டில் திருடியதாக பக்கத்து வீட்டு பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

------------
கைரேகை காட்டிக் கொடுத்தது
திருட்டு நடந்த வீட்டில் போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருந்த போது சுவர்ணலதா அங்குமிங்கும் நடமாடியபடி இருந்துள்ளார். இதனை பார்த்த போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
அதே சமயத்தில் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்களின் கைரேகைகளையும் தடயவியல் நிபுணர்கள் எடுத்தனர். பின்னர் புஷ்பா வீட்டில் பதிவாகியிருந்த கைரேகையையும், இந்த கைரேகைகளையும் அவர்கள் ஒப்பிட்டு பார்த்தனர். இதில் சுவர்ணலதாவின் கைரேகை ஒத்து போனது தெரியவந்தது. இந்த கைரேகை தான், காவலாளி வீட்டில் திருடியது சுவர்ணலதா என போலீசாருக்கு காட்டிக் கொடுத்தது.
கைதான சுவர்ணலதா, 2 குழந்தைகளுக்கு தாய் என்பதும், இவருடைய கணவர் மணிகண்டன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்