வைப்பாற்றை ஆக்கிரமித்த கருவேல மரங்கள்

வைப்பாற்றை ஆக்கிரமித்த கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-12-03 19:41 GMT
சாத்தூர், 
வைப்பாற்றை ஆக்கிரமித்த கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
கூட்டுக்குடிநீர் திட்டம் 
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த காலங்களில் சாத்தூர் வைப்பாறு, இருக்கன்குடி அணை மட்டுமே நகர மக்களின் தாகத்தை தீர்த்து வந்தது. இந்தநிலையில் தற்போது கூடுதலாக தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டமும் பயன்பாட்டில் உள்ளது. ஆனாலும் நகர் மக்களுக்கு 15 நாள் முதல் 20 நாட்கள் இடைவெளியில் தான் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
சாத்தூர் நகர் பகுதிக்கு முக்கிய நிலத்தடி குடிநீர் ஆதாரங்களான வைப்பாறு மற்றும் இருக்கன்குடி அணை பகுதி முழுவதும் கருவேல மரங்கள் வளர்ந்து உள்ளன. 20 ஆண்டுகளுக்கு முன்னர் 5 மாதங்கள் நீர் ஓடிய வைப்பாறு இன்று 10 ஆண்டுகளுக்கும் மேலாக வறண்டு காணப்பட்ட நிலையில் வேலி மரங்கள் முளைத்து காடு போல காணப்படுகிறது. 
நீர்மட்டம் 
கடந்த சில தினங்களாக விருதுநகர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. அதேபோல மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் பரவலாக மழை பெய்து வந்தது. இந்த மழையினால் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கண்மாய்கள் நிறைந்தும் மறுகால் பாயும் நிலையில் சாத்தூர் ஆற்றில் நீர் செல்லும் தடமே தெரியவில்லை.
கடந்த சில நாட்களாக பெய்த மழையில் இருக்கன்குடி அணைக்கு வைப்பாறு வழியாக சென்ற நீரினால் அணையின் நீர்மட்டம் 12 அடியாக உயர்ந்துள்ளது.
இனிவரும் காலங்களில் இந்த வைப்பாற்றில் முளைத்துள்ள கருவேல மரங்களை அகற்றி நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்