விடிய, விடிய மழை தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு சாலையின் குறுக்கே தண்ணீர் பாய்கிறது

தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு சாலையின் குறுக்கே தண்ணீர் பாய்கிறது

Update: 2021-12-03 22:31 GMT
நெல்லை:
விடிய, விடிய பெய்த மழையால் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து சற்று அதிகரித்து உள்ளது.
விடிய, விடிய மழை
வங்கக்கடலில் நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக வெயில் அடித்து வருகிறது.
நேற்று முன்தினம் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது. விடிய, விடிய லேசான மழை பெய்து கொண்டே இருந்தது.
தாமிரபரணியில் நீர்வரத்து
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்திருந்த நிலையில், மீண்டும் மழை பெய்துள்ளதால் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இருந்த போதிலும் மக்கள் வழக்கம் போல் ஆற்றில் குளித்துச் செல்கிறார்கள்.
சலவை தொழிலாளர்கள் நேற்று ஆற்றுக்கு சென்று துணிகளை துவைத்து உலர வைத்தனர். குன்னத்தூர் மலை அடிவார பகுதியில் ஏராளமான துணிகள் விரித்து போடப்பட்டிருந்ததால் வண்ண, வண்ண ஓவியங்கள் போல் காட்சி அளித்தது.
பள்ளத்தில் சிக்கிய பஸ்
நெல்லை தற்காலிக புதிய பஸ் நிலையத்தில் நேற்று பாபநாசத்துக்கு புறப்பட்ட அரசு விரைவு பஸ் அங்குள்ள பள்ளத்தில் சிக்கிக் கொண்டது.
சேற்றுக்குள் புதைந்த ஒரு சக்கரத்தை போராடி வெளியே மீட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மணிமுத்தாறு அணை
நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான அணையான பாபநாசம் அணை நிரம்பி விட்டதால் உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,087 கன அடியாகவும், வெளியேற்றம் 1,637 கன அடியாகவும் உள்ளது. இதனுடன் இணைந்த சேர்வலாறு அணை நீர்மட்டம் 143.54 அடியாக உள்ளது.
118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் நேற்று மேலும் ஒரு அடி உயர்ந்து 115 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,137 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.
வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து நிரம்பும் தருவாயை எட்டி உள்ளது. 50 அடி உயரம் கொண்ட இந்த அணை நீர்மட்டம் 46.50 அடியாக உள்ளது. 216 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
நம்பியாறு அணை நிரம்பி விட்டதால் உபரியாக 400 கன அடி தண்ணீர் வெளியேறுகிறது. கொடுமுடியாறு அணையும் நிரம்பி விட்டதால் அணைக்கு வருகிற 200 கன அடி தண்ணீர் அப்படியே உபரி நீராக வெளியேறுகிறது.
தென்காசி அணைகள்
தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 அணைகளும் நிரம்பி விட்டன. இதனால் கடநாநதி அணைக்கு வருகிற 200 கன அடி தண்ணீர் அப்படியே உபரி நீராக வெளியேற்றப்படுகிறது.
ராமநதி அணையில் இருந்து 40 கன அடி தண்ணீரும், கருப்பாநதி அணையில் இருந்து 300 கன அடி தண்ணீரும், குண்டாறு அணையில் இருந்து 71 கன அடி தண்ணீரும், வடக்கு பச்சையாறு அணையில் இருந்து 30 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.
மழை அளவு
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-
பாபநாசம் -10, சேர்வலாறு -26, மணிமுத்தாறு -26, கொடுமுடியாறு -50, அம்பை -38, சேரன்மாதேவி -72, ராதாபுரம் -3, நாங்குநேரி -32, களக்காடு -58.
கடனாநதி -12, ராமநதி -10, கருப்பாநதி -15, குண்டாறு -2, அடவிநயினார் -42, ஆய்குடி -76, செங்கோட்டை -2, தென்காசி -20, சங்கரன்கோவில் -26, சிவகிரி -61.
சாலையில் தண்ணீர்
நெல்லையில் இருந்து முக்கூடல் மற்றும் பாப்பாக்குடி வழியாக பொட்டல்புதூர் செல்லும் மெயின் ரோட்டில் நேற்று முன்தினம் இரவு முதல் தண்ணீர் பாய்ந்தோடுகிறது. ரோட்டிற்கு வடபுறம் உள்ள அரியநாயகிபுரம் மாறன் குளத்தில் மடைகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 
இதனால் சுமார் அரை கிலோமீட்டர் நீளத்திற்கு ரோட்டின் வடப்பகுதியிலிருந்து தெற்குப்பகுதிக்கு தண்ணீர் பாய்ந்து ஓடுகிறது. இந்தத் தண்ணீர் தெற்கு நோக்கி பாய்ந்து ஓடி அரியநாய கிபுரம் அணைக்கட்டு வழியாக தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. ரோட்டில் குறுக்காக தண்ணீர் பாய்ந்து ஓடுவதால் வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

மேலும் செய்திகள்