தலைமை ஆசிரியையிடம் 10 பவுன் நகை பறிப்பு

மதுரையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற தலைமை ஆசிரியையிடம் 10 பவுன் நகை பறிக்கப்பட்டது.

Update: 2021-12-04 20:45 GMT
மதுரை, 

மதுரை புதுவிளாங்குடி, குறிஞ்சிநகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவருடைய மனைவி அனுராதா (வயது 48), அரசு ஆரம்ப பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். 
சம்பவத்தன்று இவர் பள்ளி முடிந்து பஸ்சில் வந்து, விளாங்குடி பகுதியில் இறங்கினார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் அவரை பின்தொடர்ந்து வந்தார்.
ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி வந்து அனுராதா கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி விட்டார். 
உடனே அவர் கூச்சல் போட அந்த வழியாக வந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற வாலிபரை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் வேகமாக அந்த பகுதியில் இருந்து சென்று தப்பிவிட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது அதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் குறித்து தெரியவந்தது. எனவே ஓரிரு நாட்களில் அந்த நபர் பிடிபடுவார் என்று போலீசார் தெரிவித்தனர். 
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்