ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட பள்ளி மாணவி சாவு

வளவனூர் அருகே ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார். மேலும் 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2021-12-05 17:46 GMT
வளவனூர், 

விழுப்புரம் அடுத்த வளவனூர் அருகே சேர்ந்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் பரந்தாமன். இவருடைய மகள் வினிதா (வயது 15). விழுப்புரம் அரசு மகளிர் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவர் தனது உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த அபிநயா (18), ரித்திகா (15), ரோஷினி (17) மற்றும் தமிழரசி (16) ஆகியோருடன் சேர்ந்து சேர்ந்தனூர் கிராம தென்பெண்ணையாற்றில் குளித்து கொண்டிருந்தார்.
 அப்போது எதிர்பாராதவிதமாக அவர்கள் 5 பேரும் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டனர். இதில் ஒருவரை ஒருவர் காப்பற்ற முயன்றனர். இருப்பினும் முடியவில்லை. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி இளைஞர்கள் விரைந்து சென்று ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட 5 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக ஏ.கே.குச்சிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர்.

போலீசார் விசாரணை

 இதில் வினிதா, அபிநயா ஆகிய 2 பேரும் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வினிதா பரிதாபமாக இறந்தார். இது குறித்து வளவனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.  

மேலும் செய்திகள்