கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி கைது

கீழ்வேளூரில், கொலை-கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார். போலீசாரின் வாகன சோதனையில் அவர் சிக்கினார்.

Update: 2021-12-06 17:29 GMT
சிக்கல்:
கீழ்வேளூரில், கொலை-கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார். போலீசாரின் வாகன சோதனையில் அவர் சிக்கினார்.
கொலை, கொள்ளை வழக்குகள்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா வடக்கு ஆத்தூர் பேட்டை தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 42). இவர் மீது ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் 2 கொலை வழக்குகள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் உள்ளன. போலீஸ் நிலையத்தில் செந்தில்குமார் பெயர் ரவுடி பட்டியலில் இடம் பெற்று உள்ளது.
தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நடந்த கொலை முயற்சி வழக்கு தொடர்பாக இவரை போலீசார் தேடி வந்தனர். 
வாகன சோதனை
பிரபல ரவுடியான செந்தில்குமாரின் செல்போன் நம்பரை வைத்து அவர் எங்கு உள்ளார் என்று விசாரணை நடத்தி வந்தனர். இதில் அவர் நாகை மாவட்டத்தில் இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து தூத்துக்குடி போலீசார், நாகை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு செந்தில்குமார், காரில் கீழ்வேளூரை நோக்கி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார், கீழ்வேளூர் ெரயில்வேகேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரை ஓட்டி வந்தது செந்தில்குமார் என்பது தெரிய வந்தது. 
கைது
இதனைத்தொடர்ந்து போலீசார் செந்தில்குமாரை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர் கடந்த 2 மாதமாக தலைஞாயிறு அருகே கரியாப்பட்டினம் பகுதியில் தங்கி இருந்தது தெரிய வந்தது. 
இதுதொடர்பாக கீழ்வேளூர் போலீசார், ஆத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். நேற்று காலை ஆத்தூர் போலீசார் கீழ்வேளூருக்கு வந்து செந்தில்குமாரை விசாரணைக்காக அழைத்துச்சென்றனர்.

மேலும் செய்திகள்