சரக்கு வாகனத்தில் கடத்திய 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

முதுகுளத்தூர் அருகே சரக்கு வாகனத்தில் கடத்திய 2 ஆயிரத்து 250 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவரை கைது செய்தனர்.

Update: 2021-12-07 18:38 GMT
ராமநாதபுரம்
முதுகுளத்தூர் அருகே சரக்கு வாகனத்தில் கடத்திய 2 ஆயிரத்து 250 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவரை கைது செய்தனர்.
ரேஷன் அரிசி 
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவதாக ராமநாதபுரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றபுலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் அசோக் தலைமையில் ஜெயப்பிரியா, சதீஷ்குமார் ஆகியோர் அங்கு விரைந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தியபோது அதில் இருந்த நபர் தப்பி ஓடிவிட்டார். 
வாகனத்தை சோதனையிட்டபோது அதில் மூடைகளில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. மொத்தம் 2 ஆயிரத்து 250 கிலோ ரேஷன்அரிசியை மேலச்சிறுபோது கிராமத்தில் வீடுவீடாக சென்று விலைகொடுத்து வாங்கி சேகரித்து கொண்டு சென்றது தெரிந்தது. வாகனத்தில் இருந்தவரிடம் விசாரித்தபோது அவர் சிக்கல் காமராஜர்புரத்தை சேர்ந்த முனீஸ்வரன் (28) என்பதும், தப்பி ஓடியவர் ஏ.புனவாசல் பகுதியை சேர்ந்த முத்து என்பதும் தெரிந்தது.
கைது
இந்த முத்து என்பவர்தான் மேலச்சிறுபோது கிராமத்தில் வீடுவீடாக சென்று வாகனத்தில் அரிசியை வாங்கி வருபவர் என்பதும், முனீஸ்வரன் அவரிடம் வேலைக்கு இருந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து கைப்பற்றப்பட்ட அரிசியை போலீசார் நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் ஒப்படைத்தனர். பிடிப்பட்ட முனீஸ்வரனை ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய முத்துவை போலீசார் தேடிவருகின்றனர். 
ராமநாதபுரம் அருகே 2 ஆயிரத்து 250 கிலோ ரேஷன் அரிசி கடத்தி சென்றதை போலீசார் மடக்கி பிடித்து கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ரேஷன்அரிசியை மேற்கண்ட முத்து குறைந்த விலைக்க வாங்கி சென்று மாட்டுத் தீவனத்திற்காகவும், கோழி தீவனத்திற்காகவும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவது விசாரணையில் தெரியவந்தது. ரேஷன்கடைகளில் அரிசி வினியோகம் செய்ததும், இதுபோன்று சரக்கு வாகனத்தை எடுத்துக்கொண்டு கிராமங்கள் தோறும் சென்று ரேஷன் அரிசியை வாங்கி வருவதை வாடிக்கையாக சென்றுள்ளனர்.

மேலும் செய்திகள்