தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மற்றொரு அமைப்பை சேர்ந்தவர்கள் வந்து எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-12-07 18:48 GMT
நெல்லை:
நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மற்றொரு அமைப்பை சேர்ந்தவர்கள் வந்து எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

முற்றுகை போராட்டம்

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் பணியாற்றக்கூடிய தூய்மைப் பணியாளர்கள் நேற்று பணியை புறக்கணித்துவிட்டு நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சி.ஐ.டி.யு. தலைவர் மோகன், பொதுச்செயலாளர் மாரியப்பன், பொருளாளர் செல்லதுரை ஆகியோர் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் திடீெரன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மனு கொடுத்தனர்

இதைத்தொடர்ந்து நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், “நெல்லை மாநகராட்சி தூய்மை பணியாளர் மாரிமுத்து மாடு முட்டி பலியாகியுள்ளார். அவரது குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும். மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். நெல்லை மாநகராட்சி பகுதியில் தூய்மை பணியை தனியாரிடம் ஒப்படைப்பதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். மாநகராட்சி பகுதியில் தூய்மை பணியாளர்கள், சி.பி.சி. பணியாளர்கள், அம்மா உணவக பணியாளர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். 

இவர்களிடம் மாதந்தோறும் 12 சதவீதம் பணம் இ.பி.எப். பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பணம் அந்த அலுவலகத்தில் செலுத்தப்படாமல் உள்ளது. அந்த பணத்தை உடனே செலுத்த வேண்டும். தொழிலாளர்களை மிரட்டும் அதிகாரியை பணி மாற்றம் செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளனர்.

பரபரப்பு

இந்த போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன், ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி மற்றும் சிலர் கூட்டத்திற்குள் புகுந்து சி.ஐ.டி.யு. நிர்வாகிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துமாரி, தங்கதுரை மற்றும் போலீசார் விரைந்து வந்து கலைக்கண்ணன், ராமமூர்த்தி ஆகியோரை அங்கிருந்து வெளியே அழைத்துச்சென்றனர்.

மேலும் செய்திகள்