தோட்டத்தில் பதுக்கிய நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்; 7 பேர் கைது

தோட்டத்தில் பதுக்கி வைத்த நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்து 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-12-11 19:43 GMT
விருதுநகர், 
தோட்டத்தில் பதுக்கி வைத்த நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்து 7 பேரை போலீசார் கைது செய்தனர். 
ரகசிய தகவல்
மதுரை கீரைத்துறை பகுதியில் வக்கீல் ஒருவர் வீட்டில் சில நாட்களுக்கு முன்பு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தேடி வந்த நபர், விருதுநகரில் உள்ள ஒருவருடன்  செல்போனில் அடிக்கடி பேசுவது தெரிய வந்தது.
 அந்த நபரை தேடி வந்த மதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தியாகபிரியன் தலைமையிலான தனிப்படையினர், விருதுநகர் வடமலைக்குறிச்சி ரோட்டில் உள்ள புல்லலக்கோட்டை பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். இதுபற்றி விருதுநகர் புறநகர் போலீசாருக்கும் ரகசிய தகவல் அனுப்பினர்.
 நாட்டு வெடிகுண்டு 
அப்பகுதியில் உள்ள தேவராஜன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தினை வடமலைக்குறிச்சியில் உள்ள ஒருவருக்கு குத்தகைக்கு விட்டுள்ள நிலையில் அந்த தோட்டத்தில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அங்கு 4 நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களும் அங்கு இருந்தன.
நாட்டு வெடிகுண்டுகளையும், அதற்கான மூலப்பொருள்களையும் கைப்பற்றிய போலீசார் இதுபற்றி மேல் விசாரணை நடத்தினர். விசாரணையில் வடமலை குறிச்சியை சேர்ந்த மாதவன் (வயது 39), மணிமாறன் (36), விஜய் (23), குருசாமி (36), கருப்பசாமி (26), வீரமல்லன் (31), சின்னராஜ் (31) ஆகிய 7 பேரும் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவர்கள் 7 பேரும் போலீசாரிடம் சிக்கினர். 
இதனை தொடர்ந்து விருதுநகர் புறநகர் போலீசார் மாதவன் உள்ளிட்ட 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
இதில் மாதவன், கருப்பசாமி, மணிமாறன் ஆகியோர் மீது விருதுநகர் மேற்கு மற்றும் ஆமத்தூர் போலீசில் உள்ளாட்சி தேர்தல் மோதல் தொடர்பாக குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே எதிர்தரப்பினரை பழிவாங்க திட்டமிட்டு நாட்டு வெடிகுண்டு தயாரித்தனரா அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் மதுரை வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் தொடர்புடைய நபருக்கும், இவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவந்த நிலையில், அவருக்கு வெடிகுண்டு தயாரித்து கொடுக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் கண்காணிப்பு குறைபாடும் இம்மாதிரியான சட்டவிரோத சம்பவங்கள் நடைபெறுவதற்கு ஒரு காரணம் என கருதப்படுவதால் மாவட்ட போலீஸ் நிர்வாகம் இப் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்