‘நீட்’ விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பக்கோரி மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்

‘நீட்’ விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பக்கோரி மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தொடங்கி வைத்தார்.

Update: 2021-12-12 11:59 GMT
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு கேட்கும் சட்ட முன்முடிவை, தமிழக கவர்னர் உடனே ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பிடக்கோரி அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். மாநில செயலாளர் தினேஷ் சீரங்கராஜ் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தை சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தொடங்கி வைத்தார். 


அப்போது நிருபர்களிடம் செல்வப்பெருந்தகை கூறியதாவது:-

சட்டப்பேரவையின் தீர்மானத்தை மதிக்காமல், மாணவர்களின் எதிர்காலத்தை கவனத்தில் கொள்ளாமல் கவர்னர் இருக்கிறார். ‘நீட்’ தேர்வு இந்தியாவின் வளர்ச்சிக்கோ, மாணவர்களின் எதிர்காலத்துக்கோ பயன்படப்போவதில்லை. இதற்கு மாறாக மாணவ-மாணவிகளை தற்கொலைக்கு தூண்டும் விதமாகத்தான் ‘நீட்’ தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. எனவே, ‘நீட்’ விலக்கு மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு தமிழக கவர்னர் உனடியாக அனுப்பவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்