மோட்டார் சைக்கிள் விபத்தில் பல் டாக்டர் பலி உடல் உறுப்புகள் தானம்

சென்னை வேளச்சேரியில் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த பல் டாக்டர் பலியானார். அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

Update: 2021-12-13 00:18 GMT
ஆலந்தூர்,

சென்னை வேளச்சேரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ஜோஷ்வா (வயது 28). இவரது சொந்த ஊர் கன்னியாகுமரி அடுத்த கொட்டாரம் ஆகும். பல் டாக்டரான இவர், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி வந்தார்.

கடந்த 11-ந் தேதி இரவு ஜோஷ்வா, அதே பகுதியில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்றுவிட்டு நள்ளிரவு 1 மணி அளவில் தனது மோட்டார் சைக்கிளில் வேளச்சேரி 3-வது மெயின் சாலை வழியாக வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த பல் டாக்டர் ஜோஷ்வா, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

உடல் உறுப்புகள் தானம்

இது குறித்து சென்னை தெற்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் குமார் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் குமாரவேல் தலைமையில் கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில் ஜோஷ்வா இறந்த தகவல் அறிந்து கன்னியாகுமரியில் இருந்து சென்னை வந்த அவருடைய தாயார் மற்றும் சகோதரர் ஆகியோர் ஜோஷ்வாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். இதையடுத்து ஜோஷ்வா உடலில் இருந்து சிறுநீரகம், கண்கள், நுரையீரல், கணையம், இருதயம் மற்றும் இருதய வால்வுகளை டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் எடுத்து அவை தேவைப்பட்டவர்களுக்கு தானமாக வழங்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

பலியான ஜோஷ்வாவின் தந்தை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்