ஏழை மாணவர் கல்வி கட்டணத்திற்கு டி.ஜி.பி. ஏற்பாடு

சிவகாசி அருகே ஏழை மாணவர் கல்வி கட்டணத்திற்கு டி.ஜி.பி. ஏற்பாடு செய்தார்.

Update: 2021-12-13 20:14 GMT
சிவகாசி, 
சிவகாசி ஆனையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட முனீஸ்நகரை சேர்ந்தவர்  காந்தி. இவரது மனைவி இறந்துவிட்ட நிலையில் மகன் பாலமுருகன் சிவகாசியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். போதிய வருமானம் இல்லாமல் இருந்த அவர் தனது மகன் படிப்புக்கு உரிய கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வந்தார். இந்தநிலையில் பாலமுருகன் பகுதி நேரமாக வேலை செய்து படிப்பை தொடர்ந்தார். இதற்கிடையில் தனது மகன் படிப்பு செலவுக்கு உதவுமாறு காந்தி, சென்னையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்துக்கு மனு அனுப்பினார். இதையடுத்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு மனுவை விசாரித்து தகவல் தரும்படி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபுபிரசாந்த் தலைமையில் போலீசார், காந்தியின் தற்போதைய நிலை குறித்து விசாரித்து டி.ஜி.பி. அலுவலகத்துக்கு அறிக்கை அனுப்பினார். பின்னர் சைலேந்திரபாபுவின் வேண்டுகோள்படி டி.கான்சாபுரத்தை சேர்ந்த மூர்த்தி, முருகன் ஆகியோர் மாணவன் பாலமுருகனின் 2 வருட கல்வி செலவை ஏற்றுக்கொள்வதாக உறுதி அளித்தனர். பின்னர் 4-வது செமஸ்டர் கட்டண தொகையை காந்தியிடம் வழங்கினர். கல்வி உதவியை பெற்ற அவர், டி.ஜி.பி. சைலேந்திரபாபுவுக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும், நிதி உதவி வழங்கிய மூர்த்தி, முருகனுக்கும் நன்றி தெரிவித்தார்.


மேலும் செய்திகள்