பஸ் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்வதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும் கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள்

பஸ்படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

Update: 2021-12-15 15:58 GMT
கள்ளக்குறிச்சி

ஆய்வுக்கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பள்ளி மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்வதை தடுப்பது, பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்வது குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. 
கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-

கண்காணிக்க வேண்டும்

மாணவர்கள் பஸ்களில் பயணம் செய்யும்போது படிக்கட்டு மற்றும் பின்பக்க ஏணியில் தொங்கியபடி, பஸ்சின் மேற்கூரையில் அமர்ந்தபடி ஆபத்தான முறையில் பயணம் செய்வதை தடுக்கும் வகையில் பஸ் வசதி தேவைப்படும் வழித்தடங்களில் கூடுதல் பஸ்களை இயக்கவும், ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்களை கண்காணிக்கவும், பள்ளிக் கல்வித்துறை, அரசு போக்குவரத்துக் கழகம், வட்டார போக்குவரத்துத்துறை மற்றும் காவல் துறையினர் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

பஸ்களில் ஆபத்தான பயணம் மேற்கொள்வதை தடுப்பது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் காலை வழிபாட்டு கூட்டத்தின்போது மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தேவைப்படும் வழித்தடங்களில் கூடுதல் பஸ்களை இயக்க போக்குவரத்துதுறையின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். காவல்  துறையினர் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்களுக்கு உரிய அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

ஒரு வாரத்துக்குள்ளாக

கொரோனா தொற்றின் அச்சம் காரணமாக சில இடங்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை. எனவே ஆசிரியர்கள் ஒரு குழு அமைத்து பள்ளிக்கு வராத குழந்தைகளின் பெற்றோர்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைத்து குழந்தைகளும் பள்ளியில் சேருவதை உறுதி செய்ய வேண்டும். 6 வயது முதல் 18 வயதுடைய மாணவர்கள் பள்ளி செல்லும் விவரத்தை குடியிருப்பு வாரியாக கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டதில் பள்ளி செல்லா குழந்தைகளின் விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு கண்டறியப்பட்டுள்ள குழந்தைகளை ஒரு வாரத்திற்குள்ளாக பள்ளியில் சேர்ப்பதற்கும், இடைநின்ற நரிக்குறவர் இன மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், நலத்திட்ட உதவிகளை வழங்கி பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார்.\

கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர்கள் சிவராமன், கார்த்திகா, சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக துணை மேலாளர்(வணிகம்) துரைசாமி, உளுந்தூர்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தூர்வேல் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்