ரெயிலில் வியாபாரியிடம் 100 பவுன் நகை கொள்ளை

கேரளாவில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வியாபாரியிடம் 100 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2021-12-15 19:02 GMT
நாகர்கோவில், 
கேரளாவில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வியாபாரியிடம் 100 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
100 பவுன் நகை கொள்ளை
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் ஹைதர் அலி. வியாபாரியான இவர் குமரி மாவட்டம் திங்கள் சந்தையில் உள்ள ஒரு நகைக்கடைக்கு 140 பவுன் நகையை கொடுப்பதற்காக புறப்பட்டார்.
இதற்காக கேரளாவில் இருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறினார். ரெயிலில் நகையை யாரேனும் திருடிவிடக்கூடாது என்பதற்காக ஹைதர் அலி 100 பவுன் நகையை பாதுகாப்புக்காக தான் அணிந்திருந்த பெல்டோடு சேர்த்து கட்டி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. மீதமுள்ள நகையை பேக்கில் வைத்துள்ளார். 
இந்த நிலையில் இரவு நேரம் என்பதால் ஹைதர் அலி ரெயிலில் தூங்கியதாக தெரிகிறது. ரெயில் நெய்யாற்றின்கரை வந்தபோது அவர் திடீரென எழுந்து நகையை பார்த்துள்ளார். அப்போது தான் இடுப்பில் பெல்டோடு சேர்த்து கட்டி வைத்திருந்த 100 பவுன் நகையை காணாதது தெரியவந்தது. நகையை யாரோ மர்ம நபர்கள் நைசாக பெல்டோடு அறுத்து கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இதனால் ஹைதர் அலி அதிர்ச்சி அடைந்தார். 
போலீஸ் விசாரணை 
இதை தொடர்ந்து அவர் நாகர்கோவில் ரெயில் நிலையத்துக்கு வந்து சம்பவத்தை கூறினார். ஆனால் நகை கொள்ளை போன இடம் நெய்யாற்றின்கரை என்பதால் அங்குள்ள போலீசாரிடம் புகார் அளிக்கும்படி நாகர்கோவில் ரெயில்வே போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து ஹைதர் அலி நெய்யாற்றின்கரைக்கு புறப்பட்டு சென்றார். 
கொள்ளையடிக்கப்பட்ட நகையின் மதிப்பு சுமார் ரூ.40 லட்சம் இருக்கும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இதுபற்றி நெய்யாற்றின்கரை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ரெயிலில் வியாபாரியிடம் 100 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்