சாராய பாக்கெட்டுகளை சட்டைக்குள் மறைத்து கொண்டு வந்த முதியவரால் பரபரப்பு

புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு சாராய பாக்கெட்டுகளை சட்டைக்குள் மறைத்து கொண்டு வந்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-12-16 19:41 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டத்தை ஒட்டியுள்ள புதுச்சேரி மாநிலத்தில் மதுபானங்கள் விலை குறைவு என்பதால் ஏராளமான மதுபிரியர்கள் அங்கு படையெடுத்து செல்கின்றனர். அங்கு சாராயமும் எளிதில் கிடைப்பதால் காலை, மாலை நேரங்களில் மதுபிரியர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதை பயன்படுத்தி சிலர் மது கடத்தலிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுக்க சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். இருப்பினும் சாராயம், மது கடத்தலை தடுக்க முடியவில்லை.
சாராய பாக்கெட்டுகள் விழுந்தது
இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் கடலூர் பஸ் நிலையத்தில் முதியவர் ஒருவர் நடக்க முடியாத அளவுக்கு மது போதையில் வந்தார். அவர் தள்ளாடியபடி வந்ததால், அவரது சட்டையில் மறைத்து வைத்திருந்த ஒரு சில சாராய பாக்கெட்டுகள் கீழே விழுந்தன. இதை பஸ் நிலையத்திற்கு வந்த பயணிகள் வேடிக்கை பார்த்தபடி சென்றனர்.
இதையடுத்து, அங்குள்ள புறக்காவல் நிலைய போலீசார் வந்து, அந்த முதியவரை அழைத்து விசாரித்தனர். அப்போது அவர் கைலி, சட்டையில் இருந்து மேலும் சாராய பாக்கெட்டுகள் கீழே விழுந்தன. 30-க்கும் மேற்பட்ட சாராய பாக்கெட்டுகள் விழுந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

பரபரப்பு

தொடர்ந்து அந்த முதியவரிடம் போலீசார் விசாரித்த போது, அவர் குறிஞ்சிப்பாடி அருகே சேடப்பாளையத்தை சேர்ந்த மாயவன் (வயது 75) என்று தெரிய வந்தது. வயது முதிர்வு காரணமாக அடிக்கடி புதுச்சேரிக்கு செல்ல முடியாது என்பதால், வீட்டில் வைத்து குடிப்பதற்காக மொத்தமாக சாராய பாக்கெட்டுகளை வாங்கி, அதை மறைத்து எடுத்து வந்ததாக போலீசாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை எச்சரித்து அனுப்பி உள்ளனர். முன்னதாக அவரது உடலில் இருந்து சாராய பாக்கெட்டுகள் விழுவதை வாலிபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் செய்திகள்