மனைவி, மகளுடன் கால்வாயில் குதித்து அரசு உதவி என்ஜினீயர் தற்கொலை

துமகூரு அருகே மனைவி, மகளுடன் கால்வாயில் குதித்து அரசு உதவி என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-12-17 20:38 GMT
பெங்களூரு:
  
 கால்வாயில் குதித்து தற்கொலை

  துமகூரு மாவட்டம் குப்பி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 55). இவர், துமகூருவில் நீர்ப்பாசனத்துறையில் உதவி என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி மமதா (45). இந்த தம்பதியின் மகள் சுபா (25). நேற்று முன்தினம் இரவு குப்பி அருகே நாகரனஹள்ளி பகுதிக்கு ரமேஷ் தன்னுடைய மனைவி, மகளுடன் காரில் வந்தார். பின்னர் காரை அங்குள்ள ஹேமாவதி ஆற்று கால்வாய் அருகே அவர் நிறுத்தினார்.

  இந்த நிலையில், ரமேஷ், தனது மனைவி, மகளுடன் கால்வாய்க்குள் குதித்தார். கால்வாயில் தற்போது அதிக தண்ணீர் வருவதால் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். மேலும் ரமேஷ் உள்பட 3 பேரும் கால்வாய் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்கள். கால்வாய் அருகே நீண்ட நேரமாக கார் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், குப்பி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

3 பேரின் உடல்கள் மீட்பு

  போலீசார் விரநை்து வந்து விசாரணை நடத்தினார்கள். காரில் சோதனை நடத்திய போது அரசு உதவி என்ஜினீயரான ரமேஷ் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில், மனைவி, மகளுடன் கால்வாயில் குதித்து தற்கொலை செய்வதாகவும், தங்களது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என்றும் ரமேஷ் எழுதி வைத்திருந்தார். இதையடுத்து, தீயணைப்பு படைவீரர்கள் வரவழைக்கப்பட்டு கால்வாயில் 3 பேரையும் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

  நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு கால்வாயில் இருந்து ரமேஷ், மமதா மற்றும் சுபாவின் உடல்கள் மீட்கப்பட்டது. ஒரே குடும்பத்தில் 3 பேரும் என்ன காணத்திற்காக தற்கொலை செய்தார்கள்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து குப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்