பள்ளியின் மேற்கூரை சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு

குறிஞ்சிப்பாடி அருகே பள்ளியின் மேற்கூரை சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்ததால் மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2021-12-18 18:49 GMT
கடலூர், 

நெல்லையில் பள்ளிக்கூட கழிவறை சுவர் நேற்று முன்தினம் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலியாகினர். தமிழகத்தையே உலுக்கிய இந்த பரபரப்பு சம்பவம் அடங்குவதற்குள் கடலூர் மாவட்டத்தில் அரசு பள்ளியின் மேற்கூரை சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஆயிப்பேட்டை கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் ஆயிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த சுமார் 70 மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். மேலும் இங்கு தலைமை ஆசிரியர் உள்பட 2 ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். இந்த பள்ளிக்கூடத்திற்குரிய ஒரு கட்டிடத்தில் ரேஷன் கடை இயங்கி வருகிறது.

கண்டுகொள்ளாத அதிகாரிகள்

இந்த நிலையில் பள்ளி வகுப்பறை கட்டிடம், கடந்த 2 ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் கட்டிடத்தை சீரமைத்து தரும்படி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால் மாணவர்கள் பெரும் அச்சத்துடனே வகுப்பறைகளுக்கு சென்று பாடம் பயின்று வந்தனர்.
மேலும் சில பெற்றோர், பள்ளி கட்டிடத்தின் மோசமான நிலையை கண்டு தங்கள் குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்க்க தொடங்கினர்.
பெயர்ந்து விழுந்த சிமெண்டு காரைகள்
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கூடத்திற்கு மாணவர்கள் வந்தனர். பின்னர் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தனர். இதற்கிடையே காலை 11 மணி அளவில் பள்ளி வகுப்பறையின் மேற்கூரை சிமெண்டு காரைகள் திடீரென பெயர்ந்து விழுந்தது.
இதனால் பதறிய மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அலறியடித்துக் கொண்டு வகுப்பறையில் இருந்து வெளியே ஓடி வந்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர். பின்னர் வகுப்பறைக்குள் யாரும் செல்லாத வகையில் கதவை பூட்டினர். தொடர்ந்து பள்ளிக்கூடத்தின் முன்பு வைத்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தினர்.

பரபரப்பு

இதற்கிடையே மேற்கூரை சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்தது குறித்து ஆசிரியர்கள், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், கண்டுகொள்ளவில்லை. இதனால் பள்ளி கட்டிடத்தை உடனே சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையெனில் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப மாட்டோம் எனவும் மாணவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் உள்ள பள்ளி கட்டிடங்களின் உறுதித்தன்மையை ஆராய குழு அமைத்து, முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஆனால் ஆயிப்பேட்டையில் பள்ளி மேற்கூரை சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்தது பற்றி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், கண்துடைப்புக்காக கூட யாரும் வந்து பார்வையிடவில்லை. இது மாணவர்களின் பெற்றோர்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்