ஓசூர் உட்கோட்டத்தில் 866 இடங்களில் 3,174 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்-போலீஸ் ஐ.ஜி. சுதாகர் தகவல்

ஓசூர் உட்கோட்டத்தில் 866 இடங்களில் 3,174 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக போலீஸ் ஐ.ஜி. சுதாகர் தெரிவித்தார்.

Update: 2021-12-21 16:44 GMT
மத்திகிரி:
பாராட்டு விழா
ஓசூர் அருகே உள்ள மத்திகிரியில் சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கும், ஓசூர் உட்கோட்டத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நன்கொடை வழங்கிய தொழில் அதிபர்கள், ஊராட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் காவல் துறை சார்பில் பாராட்டு விழா நடந்தது. ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் வரவேற்றார். 
இதில் கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் கலந்து கொண்டு போலீசாரையும், நன்கொடையாளர்களையும் பாராட்டி, சான்றிதழ், பரிசு வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
3,174 கண்காணிப்பு கேமராக்கள்
ஓசூர் காவல் உட்கோட்டத்தில் 866 இடங்களில் 3 ஆயிரத்து 174 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 2 ஆயிரம் கேமராக்கள் பொருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழக எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் 15 அதிநவீன கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.  கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்றங்களை தடுக்கவும், குற்றங்களில் ஈடுபடுபவர்களை விரைவாக கண்டறியவும் முடியும்.
ஓசூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஒருவழிப்பாதைகள் அமைக்க பொதுமக்களிடம் கருத்து கேட்டு முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. மகேஸ்வரி, கிருஷ்ணகிரி போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், ராஜீ, தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கிருத்திகா, இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், பாலகிருஷ்ணன், தங்கவேல், மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்