ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ஏரியில் குதித்தனர்; தாய், மகள், மருமகன் உயிரிழப்பு

மாகடி அருகே, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ஏரியில் குதித்தனர். இதில் தாய், மகள், மருமகன் ஆகிய 3 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சிறுமிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2021-12-22 21:27 GMT
பெங்களூரு:

ஏரியில் குதித்தனர்

  ராமநகர் மாவட்டம் மாகடி அருகே சோலூரு பகுதியில் உள்ள தம்மனகட்டே கிராமத்தில் வசித்து வந்தவர் சித்தம்மா(வயது 55). இவரது மருமகன் ஹனுமந்தராஜு(35). மகள் சுமித்ரா(30). பேத்தி கீர்த்தனா(10). ஹனுமந்தராஜு விவசாய கூலி தொழிலாளி ஆவார்.

  இந்த நிலையில் நேற்று இவர்கள் அனைவரும் கிராமத்தையொட்டி உள்ள ஒரு ஏரிக்கு சென்றனர். அங்கு திடீரென அனைவரும் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் ஏரியில் குதித்தனர்.

3 பேர் உயிரிழப்பு

  இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சில இளைஞர்கள் ஏரியில் குதித்து அவர்களை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் சிறுமியை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. மற்ற 3 பேரும் ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபற்றி அப்பகுதி மக்கள் குதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

  தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினருடன் வந்து ஹனுமந்தராஜு, சுமித்ரா, சித்தம்மா ஆகியோரின் உடல்களை மீட்டனர். பின்னர் அவர்களது உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுமி கீர்த்தனாவையும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரியில் அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சோகம்

  ஹனுமந்தராஜு எதற்காக குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்