ராமநத்தம் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி விவசாயிகள் போராட்டம்

ராமநத்தம் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2021-12-23 17:31 GMT
ராமநத்தம், 

ராமநத்தம் அருகே மா.பொடையூர் கிராமத்தில் நேற்று மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டிருந்தார். அப்போது விவசாயிகள் சிலர், திட்டக்குடி அடுத்த நாவலூர் கிராமத்தில் உள்ள ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி அருகில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து ராமநத்தம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெய்கீர்த்தி, விஸ்வநாதன் மற்றும் போலீசார் விரைந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையேற்ற அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி தலைவர் கோடங்குடியைச் சேர்ந்த தயாபேரின்பம், மேலூரை சேர்ந்த கலியன், நாவலூரை சேர்ந்த கோடீஸ்வரன், முருகானந்தம், சிறுமுளை கிராமத்தை சேர்ந்த வீரராஜன் ஆகிய 5 பேர் மீது ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

மேலும் செய்திகள்