“எல்லோரும் இருந்தும் தனியாகத்தான் இருக்கிறேன்” - பூந்தமல்லியில் கேரள வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை..!

உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் அப்படியே பெற்றோரிடம் ஒப்படைக்கும்படி உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-01-04 02:46 GMT
பூந்தமல்லி,

சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம், பெரிய தெருவில் வசித்து வந்தவர் அர்ஜூன் (வயது 23). கேரளாவைச் சேர்ந்தவரான இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு அர்ஜூன், தனது வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த ராயலா நகர் போலீசார், அர்ஜூன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரது அறையில் சோதனை செய்தபோது அர்ஜூன் எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.

அதில் அவர், “எனக்கு வாழ பிடிக்கலை. எல்லோரும் இருந்தும் நான் தனியாகத்தான் இருக்கிறேன். அதனால் நான் சாகப்போகிறேன். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. என்னுடைய கடைசி ஆசை, என்னுடைய உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் அப்படியே எனது பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும்” என எழுதி வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதுபற்றி ராயலா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அர்ஜூன், ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்த பெண் நேற்று முன்தினம் இரவு அர்ஜூன் வீட்டுக்கு வந்து சென்ற பிறகு அவர் தற்கொலை செய்து கொண்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

அர்ஜூனுக்கு சரியான வேலை இல்லை என்றும், அவரது வாய்க்குள் சிறிய அளவிலான புண் இருப்பதால் அது புற்று நோயாக இருக்குமோ? என அச்சத்தில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

எனவே அர்ஜூனின் தற்கொலைக்கு காரணம் காதல் விவகாரமா? அல்லது உடல் பிரச்சினையா? அல்லது வேறு ஏதும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்