தனித்தனி விபத்தில் என்.எல்.சி. தொழிலாளி உள்பட 2 பேர் பலி

மந்தாரக்குப்பம், பரங்கிப்பேட்டை அருகே நடந்த தனித்தனி விபத்தில் என்.எல்.சி.தொழிலாளி உள்பட 2 பேர் பலியாகினர்.

Update: 2022-01-06 17:43 GMT
மந்தாரக்குப்பம், 

என்.எல்.சி. தொழிலாளி

மந்தாரக்குப்பம் அடுத்த தெற்கு வெள்ளூர் பகுதியை சேர்ந்தவர் நடேசன் (வயது 59). இவர் நெய்வேலி என்.எல்.சி.க்கு சொந்தமான நிலக்கரி சுரங்கம் 2-ல் நிரந்தர தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். நடேசன் தனது மனைவியுடன் வீணங்கேணியில் உள்ள மகளை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் மாலை  மந்தாரக்குப்பத்தில் இருந்து வீணங்கேணிக்கு பஸ்சி்ல் சென்றார். பின்னர் அவர், மனைவியுடன் வீணங்கேணி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, அங்குள்ள சாலையை கடக்க முயன்றார்.

பஸ் மோதியது

அந்த சமயத்தில் திருச்சியில் இருந்து கடலூர் நோக்கி வந்த அரசு பஸ் நடேசன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெய்வேலி என்.எல்.சி. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நடேசன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மற்றொரு சம்பவம்

பரங்கிப்பேட்டை அருகே உள்ள பெரியகுமட்டி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் (60). கூலி தொழிலாளியான இவர் நேற்று அதிகாலை பெரியகுமட்டியில் இருந்து சைக்கிளில் பு.முட்லூருக்கு புறப்பட்டார். சம்பந்தம் கிராமம் அருகே வந்தபோது, சிதம்பரத்தில் இருந்து கடலூர் நோக்கி சென்ற லாரி ஒன்று நடராஜன் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த நடராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி, சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்