கண்டாச்சிபுரம் கூட்டுறவு வங்கியில் போலியாக கையெழுத்து போட்டு நகை அடகு வைத்துள்ளதாக மேலும் ஒரு விவசாயி புகார்

கண்டாச்சிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் போலியாக கையெழுத்து போட்டு நகை அடகு வைத்துள்ளதாக மேலும் ஒரு விவசாயி கொடுத்த புகார் குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார்

Update: 2022-01-08 17:23 GMT
திருக்கோவிலூர்

நகைக்கடன்

திருக்கோவிலூர் அருகே உள்ள மேல்வாலைகிராமம் முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள்(வயது 58). விவசாயியான இவர் கடந்த பிப்ரவரி மாதம் கண்டாச்சிபுரத்தில் உள்ள விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளையில் 10 கிராம் நகையை அடகு வைத்து ரூ.18 ஆயிரம் கடன் பெற்றார்.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் அறிவித்த 5 பவுன் மற்றும் அதற்கும் கீழே எடை உள்ள நகைகள் கடன் தள்ளுபடி அறிவிப்பு திட்டத்தின் கீழ் தனது நகையை மீட்டு வர அவர் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்றபோது அதே ஊரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கலியபெருமாள் பெயரில்  40 கிராம் நகை கடன் இருப்பதாகவும் அதனால் கடன் தள்ளுபடி சலுகையை பெற முடியாது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

போலீசார் விசாரணை

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் தான் மத்திய கூட்டுறவு வங்கியில் மட்டும்தான் நகைகளை அடகு வைத்து கடன் வாங்கினேன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகைகளை அடகு வைக்கவில்லை. எனவே  தனது பெயரில் யாரோ போலியாக கையெழுத்து போட்டு நகைக்கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக கூறினார். 
மேலும் இது குறித்து கூட்டுறவு சங்க செயலாளர் மற்றும் தலைவர் ஆகியோர் மீது அவர் கொடுத்த புகாரின் பேரில் கண்டாச்சிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஒரு விவசாயி புகார்

இந்த பரபரப்பு சம்பவம் அடங்குவதற்குள் அதே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் யாரோ மர்ம நபர் போலியாக கையெழுத்து போட்டு தனது பெயரில் நகைகளை அடகு வைத்து கடன் வாங்கி இருப்பதாக  மேலும் ஒரு விவசாயி கண்டாச்சிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனால் மேற்படி கூட்டுறவு வங்கியில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதையடுத்து இந்த மோசடி சம்பவங்கள் குறித்து விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் தனது அலுவலகத்தில் வைத்து நேரடி விசாரணை நடத்தி வருகிறார். மேலும் கடன் தள்ளுபடி சலுகையை விவசாயிகள் பெறாமல் இருப்பதற்காக இதுபோன்று வேறு வங்கியில் கடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனரா? அல்லது உண்மையிலேயே விவசாயிகள் பெயரில் வேறு நபர்கள் போலியாக கையெழுத்து போட்டு நகைக்கடன் வாங்கி மோசடி செய்துள்ளார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கண்டாச்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்