ஆற்றில் மூழ்கி 1½ வயது குழந்தை பலி

வளநாடு அருகே ஆற்றில் மூழ்கி 1½ வயது குழந்தை மூழ்கி பலியானது. ேமலும் தந்தையுடன் தூங்கிய குழந்தை ஆற்றுக்கு சென்றது எப்படி? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-01-08 19:11 GMT
துவரங்குறிச்சி, ஜன.9-
வளநாடு அருகே ஆற்றில் மூழ்கி 1½ வயது குழந்தை மூழ்கி பலியானது. ேமலும் தந்தையுடன் தூங்கிய குழந்தை ஆற்றுக்கு சென்றது எப்படி? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தந்தையுடன் தூங்கிய குழந்தை
திருச்சி மாவட்டம், வளநாடு அருகே உள்ள வேம்பனூர் கல்லுதோண்டி பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி. கூலித் தொழிலாளி. இவரது மகள் நிலாஸ்ரீ (வயது 1½). நேற்று மதியம் குழந்தையுடன் சுப்ரமணி தூங்கிக் கொண்டிருந்தார்.
இந்தநிலையில் சுப்ரமணி எழுந்து பார்த்த போது நிலாஸ்ரீயை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சுப்ரமணி மகளை அக்கம்பக்கத்தில் தேடினார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து  வீட்டில் இருந்து சற்று தொலைவில் வேம்பனூர் வெள்ளாற்று பகுதிக்கு குழந்தை சென்று இருக்கலாம் என சந்தேகம் அடைந்தனர்.
ஆற்றுக்குள் குழந்தை
இதனையடுத்து ஆற்றில் குழந்தையை தேட இலுப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான தீயணைப்பு குழுவினர் தேடி பார்த்தனர். இந்த தேடுதல் வேட்டையில் குழந்தை ஆற்றுக்குள் இருந்து பிணமாக மீட்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த வளநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இருப்பினும் குழந்தை நிலாஸ்ரீ எப்படி ஆற்றுப் பகுதிக்கு சென்றார்? தூங்கிக் கொண்டிருந்த குழந்தை எப்போது எழுந்து சென்றது? வீட்டில் இருந்து தனியாக சென்றது குறித்தும் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த  சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்