தற்காலிக விரிவுரையாளர்கள்-அலுவலக பணியாளர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

தற்காலிக விரிவுரையாளர்கள்-அலுவலக பணியாளர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

Update: 2022-01-08 19:32 GMT
பெரம்பலூர்:

குரும்பலூரில் இயங்கி வரும் பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் தற்காலிகமாக பணிபுரியும் கவுரவ, மணிநேர விரிவுரையாளர்களும் மற்றும் அலுவலக பணியாளர்களும் தங்களுக்கு 4 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அவர்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நேற்று முன்தினம் முதல் கல்லூரி வளாகத்தில் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினர். நேற்று முன்தினம் இரவிலும் நீடித்த இந்த போராட்டம் 2-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது.
இந்நிலையில் போராட்டக்காரர்களிடம் கல்லூரி கல்வி இணை இயக்குனர் மேகலாவும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்ற குழு உறுப்பினர் சேகரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து கல்லூரி இணை இயக்குனர், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெறக்கூடிய நிதிநிலை கூட்டத்தில் அது பற்றி விவாதிக்கிறேன் என்றார். பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் வருகிற 20-ந்தேதி நடைபெறும் ஆட்சிமன்ற குழு மற்றும் நிதி குழுவிலும் அவர்களுடைய கோரிக்கைகளை விவாதித்து தகவலை தெரிவிப்பதாக கூறினார். அதனை தொடர்ந்து தற்காலிக கவுரவ, மணிநேர விரிவுரையாளர்கள், அலுவலக பணியாளர்கள் தங்களது காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்து விட்டு கலைந்து சென்றனர். கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் வருகிற 21-ந்தேதி முதல் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்