தேனியை சேர்ந்த 4 பேர் கைது

ராமநாதபுரம் அருகே ரூ.30 லட்சம் நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் தேனி மாவட்டத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2022-01-11 14:51 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் அருகே ரூ.30 லட்சம் நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் தேனி மாவட்டத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
கொள்ளை
ராமநாதபுரம் அருகே உள்ள மேலக்கோட்டை கிராமத்தில் மும்தாஜ் பேகம் மற்றம் அகமது அலி ஆகியோரின் வீட்டு பூட்டை உடைத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் 67 பவுன் நகை மற்றும் ரூ.65 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். 
இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். கண் காணிப்பு கேமராக்களின் காட்சிகளின் அடிப்படையில் இவர்கள் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதை போலீசார் அடையாளங்களை வைத்து முதலிலேயே கண்டறிந்தனர். 
தனிப்படை
இந்த தகவலின் அடிப்படையில் அந்த பகுதிக்கு நவநீத கிருஷ்ணன், குகனேசுவரன் ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதன்படி முதலில் 2 பேரை பிடித்து வந்த போலீசார் அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம் இரவு மேலும் 2 பேரை பிடித்து வந்தனர்.
இவர்கள் அந்த பகுதியில் கல் உடைக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் என்பதும் கும்பலாக சேர்ந்து வெளிமாவட்டங்களுக்கு சென்று ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள வெளிநாடுகளில் வசித்து வருபவர்களின் வீடுகள், பூட்டி இருக்கும் வீடுகளை குறிவைத்து சரியான நேரம்பார்த்து நேரில் வந்து கொள்ளையடிப்பதை வாடிக்கையாக கொண்டவர்கள் என்று தெரியவந்துள்ளது.
விசாரணை 
இவர்கள் இதேபோன்று மேலக்கோட்டை பகுதிக்கு முன்னரே வந்து நோட்டம் பார்த்துவிட்டு மறுநாள் நள்ளிரவில் வந்து கொள்ளையடித்து சென்றுள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் கொள்ளையடித்த நகைகளை கைப்பற்ற தனிப்படையினர் பல்வேறு பகுதிகளுக்கு விரைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்