ஈமு கோழி பண்ணை நடத்தி ரூ.5½ கோடி மோசடி செய்தவர் கைது

சென்னிமலையில் ஈமு கோழி பண்ணை நடத்தி ரூ.5½ கோடி மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-01-12 15:40 GMT
சென்னிமலையில் ஈமு கோழி பண்ணை நடத்தி ரூ.5½ கோடி மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
ரூ.5½ கோடி மோசடி
ஈரோடு மாவட்டம் சென்னிமலை காட்டூர் ரோடு ரோஜா நகரை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது63). இவர் தனது பெயரில் ஈமு பார்ம்ஸ் என்ற பெயரில் ஈமு கோழிப்பண்ணை நடத்தி வந்தார். இவரது பண்ணையில் முதலீடு செய்த 140 பேரிடம் ரூ.5 கோடியே 56 லட்சத்து 55 ஆயிரம் பெற்றுக்கொண்டு, அதனை திருப்பி தராமல் மோசடி செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இதுபற்றி ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் கடந்த 2013-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையில் செல்வகுமார் தலைமறைவானதால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சிறப்பு கோர்ட்டு செல்வகுமாரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.
தனிப்படை அமைப்பு
இதைத்தொடர்ந்து அவரை பிடிக்க, ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி, ஏட்டுகள் நடராஜன், சரவணன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் செல்வகுமாரை பல்வேறு பகுதிகளில் தேடிவந்தனர்.
இந்த நிலையில் செல்வகுமார் குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னிமலைக்கு வந்து தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து தனிப்படையினர் நேற்று காலை சென்னிமலைக்கு விரைந்தனர். அப்போது அங்கு ஒரு வீட்டில் பதுங்கியிருந்த செல்வகுமாரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
கைது
பின்னர் போலீசார் அவரை கைது செய்து கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
இதைத்தொடர்ந்து நீதிபதி ரவி, செல்வகுமாரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்