திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி திறப்பு விழா

திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரியை பிரதமர் நரேந்திரமோடி காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். இதில் அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் பங்கேற்றனர்.

Update: 2022-01-12 17:26 GMT
திண்டுக்கல்:

திண்டுக்கல் மருத்துவ கல்லூரி

திண்டுக்கல்லில் அரசு மருத்துவ கல்லூரி தொடங்க வேண்டும் என்பது மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் புதிதாக 11 அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்மூலம் திண்டுக்கல்லுக்கும் ஒரு மருத்துவ கல்லூரி கிடைத்தது.

இதையடுத்து திண்டுக்கல் அருகே ஒடுக்கத்தில் ரூ.327 கோடி செலவில் அரசு மருத்துவ கல்லூரி கட்டும் பணி கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கியது. 

இதில் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவ கல்லூரி, அனைத்து வகையான சிகிச்சை பிரிவுகளும் இடம்பெற்ற மருத்துவமனை, குடியிருப்புகள் ஆகியவற்றுக்கு தனித்தனியாக கட்டிடங்கள் கட்டப்பட்டன. இங்கு 150 மாணவ-மாணவிகள் மருத்துவ படிப்பில் சேர்க்கப்பட உள்ளனர்.

திறப்பு விழா 

இந்த அரசு மருத்துவ கல்லூரியின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அதோடு சேர்த்து தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 அரசு மருத்துவ கல்லூரிகளையும் பிரதமர் நரேந்திரமோடி காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையொட்டி திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். 

இதில் கலெக்டர் விசாகன், கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், வேலுச்சாமி எம்.பி., காந்திராஜன் எம்.எல்.ஏ., மருத்துவ கல்லூரி டீன் விஜயகுமார், நலப்பணிகள் இணை இயக்குனர் பாக்கியலட்சுமி, துணை இயக்குனர்கள் பூங்கோதை, வரதராஜன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்