வன விலங்குகளை தடுக்க அமைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி பலி-உத்தனப்பள்ளி அருகே சோகம்

உத்தனப்பள்ளி அருகே வன விலங்குகளை தடுக்க அமைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி பலியானார்.

Update: 2022-01-12 17:42 GMT
ராயக்கோட்டை:
விவசாயி
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளியை அடுத்த ராமாபுரத்தை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 38). விவசாயி. இவருடைய மனைவி பவித்ரா. இந்த தம்பதிக்கு 2 மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். முனிராஜ்க்கு சொந்தமான விவசாய நிலம் அந்த பகுதியில் உள்ளது. 
இந்தநிலையில் நேற்று காலை அவர் வழக்கம் போல் விவசாய நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார். அங்கு அதே பகுதியை சேர்ந்த விவசாயி நாகராஜ் (45) தனது நிலத்தில் வன விலங்குகள் புகுவதை தடுக்க மின்வேலி அமைத்திருந்தார்.
மின்வேலியில் சிக்கி பலி
இதனை அறியாத முனிராஜ் அந்த வழியாக நடந்து சென்றபோது எதிர்பாராத விதமாக மின்வேலியை மிதித்தார். இதில் மின்சாரம் தாக்கி அவர் படுகாயம் அடைந்தார். பக்கத்து நிலத்துக்காரர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு முனிராஜை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உத்தனப்பள்ளி போலீசார் விரைந்து சென்று முனிராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விவசாய நிலத்தில் மின்வேலி அமைத்த நாகராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
வனவிலங்குகளை தடுக்க அமைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்