பெற்றோரை பராமரிக்காததால் மகன் பெயரில் எழுதிய சொத்துக்களை ரத்து செய்ய கோரிக்கை. விவசாயி தீக்குளிக்க முயற்சி

குடியாத்தத்தில் பெற்றோரை பராமரிக்காததால் மகன் பெயரில் எழுதிய சொத்துக்களை ரத்து செய்ய கோரிக்கை வைத்தனர். இதனால் விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2022-01-12 17:54 GMT
குடியாத்தம்

குடியாத்தத்தில் பெற்றோரை பராமரிக்காததால் மகன் பெயரில் எழுதிய சொத்துக்களை ரத்து செய்ய கோரிக்கை வைத்தனர். இதனால் விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மகன் பெயரில் சொத்து

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கார்க்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கே.கே.கஜேந்திரன் (வயது 72). விவசாயி. இவரது மனைவி சுசீலா (69). இவர்களுக்கு அமுதகுமாரி (48) என்ற மகளும், மகாதேவன் (45) என்ற மகனும் உள்ளனர். அமுதகுமாரி திருமணமாகி கணவருடன் சென்னை திருநின்றவூரில் வசித்து வருகிறார். மகாதேவன் கார்க்கூர் கிராமத்தில் விவசாயம்செய்து வருகிறார்.

முதியவர் கஜேந்திரன் இந்திய பிரதமர், தமிழக முதல்-அமைச்சர், வேலூர் மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோருக்கு அனுப்பிய புகார் மனுவில் தனக்கு சொந்தமாக 4.5 ஏக்கர் நிலம் உள்ளதாகவும், இந்த நிலத்தை தன் பெயருக்கு எழுதிக்கொடு அல்லது விற்று பணமாக்கி கொடு இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டி வந்ததாக கூறி உள்ளார். மேலும் இதுகுறித்து மேல்பட்டி போலீஸ் நிலையத்திலும் கஜேந்திரன் புகார் அளித்துள்ளர். புகாரின் பேரில் தந்தை, மகன் இருவரையும் போலீசார் அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இந்தநிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு கஜேந்திரன் தனது மகன் மகாதேவனுக்கு 2 ஏக்கர் 40 சென்டு, மகள் அமுதகுமாரிக்கு ஒரு ஏக்கர் 90 சென்டு நிலம் எழுதிக் கொடுத்துள்ளார். 

பெற்றோரை பராமரிக்க வில்லை

சொத்துக்களை எழுதிக் கொடுத்த பின்னும் மகாதேவன் தனது வயதான பெற்றோர்களை பராமரிக்காமல் இருந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த கஜேந்திரன் மற்றும் சுசிலா இருவரும் தனது மகள் வசிக்கும் திருநின்றவூருக்குச் சென்று விட்டனர். அங்கு வந்த மகாதேவன் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

 இதனையடுத்து கஜேந்திரன் தனது மகன் பெயரில் ஏழுதிவைத்த சொத்துக்களை ரத்து செய்து மீண்டும் தன்னிடம் ஒப்படைக்குமாறு அனுப்பிய புகார் மனுக்கள் மீது விசாரணை நடத்தும்படி குடியாத்தம் உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன் முதியவர் கஜேந்திரன் அவரது மனைவி சுசீலா, மகன் மகாதேவன் ஆகியோரை நேற்று விசாரணைக்கு வரும்படி சம்மன் அனுப்பியிருந்தார். இதனை தொடர்ந்து நேற்று காலையில்  கஜேந்திரன், சுசிலா இருவரும் குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன் முன் ஆஜரானார்கள்.

தீக்குளிக்க முயற்சி

 அவர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது எங்களை பராமரிக்காததால் மகன் மகாதேவன் மீது எழுதிய சொத்துக்களை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தனர். விசாரணைக்காக அங்கு வந்த மகாதேவன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது உதவி கலெக்டர் தனஞ்செயன், கஜேந்திரனிடம் உங்களது மகன் மற்றும் மகள் மீது எழுதிய சொத்துக்களை ரத்து செய்து உங்களிடம் ஒப்படைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மகாதேவன் உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே தான் கொண்டுவந்த பெட்ரோலை எடுத்து தனது உடல் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார். இதை பார்த்ததும் அங்கு மனு கொடுக்க வந்திருந்த பொதுமக்களும், உதவி கலெக்டர் அலுவலக பணியாளர்களும் தடுத்து நிறுத்தி மகாதேவன் மீது தண்ணீர் ஊற்றினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து உடனடியாக குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் மகாதேவனை விசாரணைக்காக குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். மேலும் மகாதேவன் தற்கொலை செய்ய முயன்றது குறித்து வருவாய்த் துறை சார்பில் குடியாத்தம் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின்பேரில் குடியாத்தம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்