பா.ஜனதாவினர் மனித சங்கிலி போராட்டம்

பஞ்சாப் காங்கிரஸ் அரசை கண்டித்து திண்டுக்கல், கொடைக்கானலில் பா.ஜனதாவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-01-12 18:11 GMT
திண்டுக்கல்:

பிரதமர் நரேந்திரமோடி கடந்த சில நாட்களுக்கு முன்பு பஞ்சாப் மாநிலத்துக்கு சென்றார். அப்போது பிரதமர் செல்லும் பாதையில் பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டதாக சர்ச்சை ஏற்பட்டது. 

இதையொட்டி பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசை கண்டித்து திண்டுக்கல் மெயின்ரோட்டில் பா.ஜனதா வர்த்தகர் அணி, ஓ.பி.சி. அணி, அமைப்புசாரா மற்றும் பிரசார அணி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

இதற்கு பா.ஜனதா வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் மோகன் பாண்டி தலைமை தாங்கினார். 

இதில் பா.ஜனதா மாவட்ட தலைவர் தனபாலன், ஒ.பி.சி. அணி தலைவர் பாலகிருஷ்ணன், அமைப்புசாரா அணி தலைவர் முருகேசன், பிரசார அணி தலைவர் கோகுல்கண்ணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

அப்போது பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பெரியார் சிலை முதல் மணிக்கூண்டு வரை பா.ஜனதாவினர் கைகளை கோர்த்தப்படி மனித சங்கிலியாக நின்றனர்.மேலும் கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டது.

இதேபோல் கொடைக்கானல் நகர, ஒன்றிய பா.ஜ.க. சார்பில் மனித சங்கிலி போராட்டம் கொடைக்கானல் பஸ் நிலையம் அருகே நடந்தது. இதில் பா.ஜ.க. மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பஸ் நிலையம் முதல் அண்ணா சாலை வழியாக மூஞ்சிக்கல் வரை மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அதையடுத்து நகர ஒன்றிய பா.ஜ.க. சார்பில் விவேகானந்தர் பிறந்த நாள் விழா மூஞ்சிக்கல் பகுதியில் கொண்டாடப்பட்டது. இதில் பா.ஜ.க. மாநில நிர்வாகி கணேஷ்பிரபு உள்பட பலர் கலந்துகொண்டு விவேகானந்தரின் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தனர். 

மேலும் செய்திகள்